இந்தியா

வெளியானது CUET தேர்வு முடிவுகள்! கலந்தாய்வு தேதி எப்போது?

CUET 2024 Exam Results : பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான CUET நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

வெளியானது CUET தேர்வு முடிவுகள்! கலந்தாய்வு தேதி எப்போது?
வெளியானது க்யூட் தேர்வு முடிவுகள்

CUET 2024 Exam Results : முக்கியமானதாகக் கருதப்படும் மத்திய பல்கலைகழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்கள் மிக அதிகமாக இருந்து வந்தது. இதனால் பெரும்பாலான மாணவர்களால் தாங்கள் விருப்பப்பட்ட பல்கலைக்கழகங்களில் சேர முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சிக்கலை சரி செய்யும் விதமாக மத்திய பல்கலைகழகங்களில் சேர்வதற்காக CUET பொதுத்தேர்வுகளை தேசிய தேர்வு முகமை அறிமுகப்படுத்தியது. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள், பாலினம், மதம், மொழி போன்ற எந்த வேறுபாடுகளும் இல்லாமல் இந்த தேர்வு நாடு முழுவதும் உள்ள மாணவர்களை ஒன்று சேர்க்கிறது. எந்த வேறுபடுகளுமின்றி கிராமப்புற மாணவர்களுக்கும் சமவாய்ப்புகள் வழங்குவதே CUET தேர்வின் நோக்கமாகும். இந்த தேர்வுகள் 2022ம் ஆண்டு முதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நடப்பாண்டிற்கான CUET தேர்வுகள் கடந்த மே 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை நேரடி எழுத்துத் தேர்வு மற்றும் கணினி அடிப்படையில் நடத்தப்பட்டது. தற்போது இத்தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் இத்தேர்வினை எழுதினர். அதில் 22,000 மாணவர்கள் 45 பாடங்களில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகத் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதில் தொழில் மேலாண்மைக் கல்வியில் 8,024 மாணவர்களும், பொலிட்டிக்கல் சயின்ஸ் பாடத்தில் 5,141 மாணவர்களும், வரலாற்று பாடத்தில் 2,520 மாணவர்களும், ஆங்கிலத்தில் 1,683 மாணவர்களும், சைக்காலஜியில் 1,602 மாணவர்களும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே நியாயமான காரணங்களுக்காகத் தேர்வு எழுத முடியாமல் போன 1000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வும் நடைபெற்றது. மேலும் நடப்பாண்டு நடத்தப்பட்ட இந்த தேர்வில் ஃபேஷன் ஸ்டடீஸ் மற்றும் டூரிசம் சப்ஜெட்டுகளும் சேர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: Fixed Deposit: 9%க்கும் அதிகம் வட்டி வழங்கும் வங்கிகள்!

CUET தேர்வில் பங்கேற்ற மொத்தம் 283 பல்கலைக்கழகங்களும் மெரிட் அடிப்படையில் லிஸ்ட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. மெரிட் லிஸ்ட் தயாரிக்கப்பட்ட பின்னர் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://exams.nta.ac.in/CUET-UG/ என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.