Anna University Fake Professors Issue : அண்ணா பல்கலைக் கழகத்தில் அங்கீகாரம் பெறுவதற்கு, சில கல்லூரிகள் போலியாக ஆசிரியர்களை கணக்கு காண்பித்தன. இந்தச் சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது குற்றவியல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம், துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையிலும் உயர் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆபிரகாம், பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் சிண்டிகேட் உறுப்பினருமான பரந்தாமன் உள்ளிட்ட 16 பேர் கலந்துகொண்டனர். உயர்கல்வித்துறை செயலாளராக பதிவேற்றப்பின்னர் முதல் சின்டிக்கேட் கூட்டத்தில் பிரதீப் யாதவ் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. அண்ணா பல்கலை கழகத்தில் உள்ள சிண்டிகேட் அரங்கில், காலை 11 மணிக்கு துவங்கிய கூட்டம் மாலை 5 மணி வரையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், பதிவாளராக பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டதற்கு கடந்த சிண்டிக்கேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படவில்லை என ஏற்கனவே புகார் எழுப்பியிருந்தனர். இந்நிலையில், சிண்டிகேட் ஒப்புதல் இல்லாமல் பதிவாளர் நியமனம் செய்யப்பட்டது தவறு என்பது குறித்தும், முறையாக பதிவாளர் நியமனம் செய்ய வேண்டும் என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது. இதுபற்றி சிண்டிகேட் உறுப்பினரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன் கொண்டுவந்த தீர்மானத்தின் மீது விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர், நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், இது தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞரின் கருத்துக்களை பெற்று, மீண்டும் சிண்டிகேட் குழுவை கூட்டி முடிவை எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் பொறியியல் கல்லூரிகளில் அங்கீகாரம் பெறுவதற்கு போலியாக ஆசிரியர்களை கணக்கு காண்பித்தது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மோசடி செயலில் ஈடுபட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளின் செயலை அனுமதிக்க முடியாது எனவும், சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சிண்டிகேட் குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மோசடி தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட மூவர் குழு அறிக்கை மிக விரைவாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையின் அடிப்படையில் தவறுசெய்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு அங்கீகாரம் பெற்றுள்ள கல்லூரியின் விபரங்கள், அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் வழங்கும் மையத்தினால் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 2023-24 கல்வியாண்டில் 91 பொறியியல் கல்லூரிகளில் 680க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலியாக கணக்கு காண்பித்துள்ளது தெரியவந்தது. அதேபோல் 2024-25 கல்வி ஆண்டில் 124 பொறியியல் கல்லூரிகளில் 800-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் போலியாக கணக்கு காண்பித்ததும் தெரியவந்தது.
மேலும் படிக்க - சென்னையில் 70 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!
அதனடிப்படையில் பல்கலைக்கழகத்தில் வேந்தர் என்ற முறையிலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, ஒரு பேராசிரியர் ஒன்றுக்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரியில் ஒரே கல்வி ஆண்டில் பணிபுரிவதாக அங்கீகாரம் பெறுவதற்கு பெயர் அளித்திருந்தால், அதுபோன்ற கல்லூரிகள் பேராசிரியர் விபரங்களையும் கண்டுபிடித்து அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டுமென அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி 294 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் போலி ஆசிரியர்கள் கணக்கு காட்டியது குறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.