Drugs Seized in Chennai Kilambakkam Bus Stand : கடந்த சில மாதங்களாகவே சென்னையில் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. பொது இடங்களில் கூட இளைஞர்கள் சர்வசாதாரணமாக கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகின. கல்லூரி மாணவர்கள் முதல் பலரும் போதைப் பொருட்களை உபயோகிப்பதாக தகவல்கள் வெளியாகின. முக்கியமாக சில தினங்களுக்கு முன்னர் சென்னை மெட்ரோ ரயிலில் இளைஞர் ஒருவர் கஞ்சா பயன்படுத்திய போட்டோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மெட்ரோவில் இளைஞர் கஞ்சா பயன்படுத்தியது குறித்து நமது குமுதம் நியூஸ் 24/7-ல் செய்திகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து கஞ்சா அடித்த அந்த இளைஞரை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சென்னையில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தப்பட்ட இருப்பதாக, மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் சென்னையில் உள்ள மிக முக்கியமான பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அந்த வகையில் சென்னை அருகே உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த ஒருவரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில் அவர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை கைது செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பைசல் ரகுமான் என்பது தெரியவந்தது, அவரிடமிருந்து சுமார் 6 கிலோ மெத்தபெட்டமைன் என்கிற போதைப் பொருளை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து பைசல் ரகுமானிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த மன்சூர், இப்ராஹிம் என்ற இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், அவர்களுக்கு சொந்தமான குடோன் ஒன்றிலும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 92 கிராம் பெத்தம்பெட்டமைன் என்கிற போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்படி, மொத்தம் இவர்களிடமிருந்து 6.92 கிராம் மெத்தம் பெட்டமைன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் சர்வதேச மதிப்பு 70 கோடி இருக்கும் என மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க - மார்வெல் ரசிகர்களை குறிவைக்கும் போட் நிறுவனம்!
அதேபோல் கைதான நபர்களிடம் இருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் மூவரும் இந்த போதைப் பொருட்களை ராமநாதபுரம் மாவட்டம் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது, இவர்கள் பின்னணியில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் இருக்கிறதா என அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் அதிகளவில் சென்று வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், 70 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கைதான மூவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்த போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால் இந்த கடத்தல் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா என்பது பற்றியும் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.