'அரசியலில் முதல் படி.. எதிரிகள் தவிடுபொடி'.. சமூகவலைத்தளத்தில் தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்!
தவெக மாநாட்டு தேதியை விஜய் அறிவித்த அடுத்த நொடி முதல் எக்ஸ் தளத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தவெக மாநாடு குறித்து மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அவர் கடந்த மாதம் அறிமுகம் செய்தார். தவெக கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும் உள்ளது. அதேபோல், நடுவில் உள்ள மஞ்சள் நிற பகுதியில், வாகை மலரை இரண்டு போர் யானைகள் வணங்குவது போன்று கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தவெக கொடி fevicol லோகோ போன்று இருப்பதாகவும், கேரள அரசு போக்குரத்து கழகத்தின் லோகோ (KSRTC LOGO) உள்ளதாகவும், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னத்தை அப்படியே காப்பி, பேஸ்ட் செய்துள்ளதாகவும் பல்வேறு தரப்பினர் கிண்டலடித்து வந்தனர். விஜய் கட்சியின் கொடி எங்கள் கட்சியின் கொடியைபோல் உள்ளதாக பகுஜன் சமாஜ் தேர்தல் ஆணையத்தில் புகாரே கொடுத்தது. இது ஒருபக்கம் இருக்க, தவெகவின் முதல் மாநாடு எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த மாதம் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவின. மாநாட்டுக்கான இடத்தை தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் தவெக மாநாட்டுக்கு அனுமதி அளித்த போலீசார், 25க்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தனர். ஆனாலும் தவெக மாநாடு நடக்கும் தேதி தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில், தவெகவின் முதல் மாநாடு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
'’நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள். கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு. வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி (27.10.2024), மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது’’ என்று விஜய் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
தவெக மாநாட்டு தேதியை விஜய் அறிவித்த அடுத்த நொடி முதல் எக்ஸ் தளத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தவெக மாநாடு குறித்து மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர். விஜய் கட்சியின் கொடியை கையில் ஏந்தி இருப்பது போன்றும், விஜய் மக்களை பார்த்து கையசைப்பது போன்றும் பல்வேறு புகைப்படங்களை எடிட் செய்து பகிர்ந்து வரும் அவர்கள் சமூகவலைத்தளங்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். மேலும் ’’இன்று தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான நாள்’’, ’’தடைகளை தகர்த்து வாகை சூட வா தலைவா’’, முதல் மாநாடு... அரசியலில் முதல் படி.. எதிரிகள் தவிடுபொடி.. வெற்றி நிச்சயம்’’ என்பது உள்ளிட பல்வேறு கருத்துகளையும் விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
What's Your Reaction?