தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று (நவ. 3) பனையூர் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், அணி நிர்வாகிகள் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அங்கு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாடு வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் வரும் டிசம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து 2026 தேர்தல் மாநாடு நடத்துவது தொடர்பாகவும் அதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக பொதுக் கூட்டங்கள் நடத்துவது குறித்தும் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதனையடுத்து தமிழக வெற்றிக்கழக செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஏற்கனவே தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் செயல் திட்டங்களாக அறிவிக்கப்பட்டது இன்று தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை,
1. இருமொழிக் கொள்கையை பின்பற்ற வேண்டும்.
2. ஆளுநரை திரும்ப பெற வேண்டும்.
3. சாதிவாரி கணக்கெடுப்பு மாநில அரசு நடத்த வேண்டும். மத்திய அரசுக்கு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருந்தாலும் அதனை சுட்டிக்காட்டி அரசு கால தாமதிக்கக் கூடாது.
4. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
5. மாநாடுக்கு வரும் போது உயிர் இழந்த நபர்களுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.
6. ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரும் மத்திய அரசுக்கு கண்டனம்.
7. ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியை மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசை காரணம் காட்டும் தமிழக அரசுக்கு கண்டனம்.
8. கல்வியை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.
9. மின்சார கட்டணத்திற்கு மாதம் ஒரு முறை கணக்கெடுப்பு செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து விட்டு தற்போது வரை அதை செய்யாத தமிழக அரசுக்கு கண்டனம்.
10. கால நிர்ணயம் செய்து மது கடைகளை மூட வேண்டும்.
11. போதைப் பொருள்களை ஒழிக்கச் சிறப்புச் சட்டம் கொண்டு வரப்படும்.
12. . தமிழ்நாட்டில் மணல் கொள்ளை, நிலத்தடி நீர்க் கொள்ளை. கனிம வளங்கள் கொள்ளை போன்றவற்றைத் தடுக்கச் சிறப்புப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படும்.
13. ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிநவீன வசதிகளைக் கொண்ட 'காமராஜர் மாதிரி அரசுப் பள்ளி (Kamarajar Model Govt school) ஒன்று உருவாக்கப்படும்.
14. புற்றுநோய் போன்ற தீவிரமான நோய்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மருத்துவமனைகள் நிறுவப்படும்.
15. . தமிழர்களின் மரபுவழித் தொழிலான பனைத்தொழில் மேம்படுத்தப்படும். ஆவின் பாலகங்களில் கருப்பட்டிப்பாலும் வழங்கப்படும். பதநீர், மாநில பானமாக அறிவிக்கப்படும்.
உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.