ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்..!
சென்னை தனியார் மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

சென்னை தனியார் மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.14) காலமானார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையளித்து வந்தனர்.
தொடர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்ற நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். பின்னர் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி மணப்பாக்கம், மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்காக தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், திடீரென அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், அதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வே.ரா காலமானதை தொடர்ந்து, இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில் அவரை எதிர்த்து களமிறங்கிய அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால் 66,575 வாக்குகள் வித்தியாத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினரான மக்கள் பணி செய்துவந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானது தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






