பிணைக்கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும்.. இல்லையென்றால்.. டிரம்ப் எச்சரிக்கை
ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளையும், படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ஹமாஸ் அமைப்பு முழுமையாக அழிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான இஸ்ரேலியர்கள் உயிரிழந்த நிலையில் 250-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக சிறைப்பிடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் பழிவாங்கும் நோக்கில் ஹமாஸ் அமைப்பை குறிவைத்து காசா மீது தாக்குதல் நடத்தியது. இதில் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
15 மாதங்களுக்கு மேலாக நீடித்த இஸ்ரேல்- காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக அண்மையில் இஸ்ரேல் அளித்த வரைவு ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல் அளித்தனர். அதில் மூன்று கட்டங்களாக போரை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டது. முதல்கட்டமாக கடந்த ஜனவரி 19-ஆம் தேதி அமலுக்கு வந்த ஒப்பந்தத்தின் கீழ் 33 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர்.
இதற்கு மாறாக 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தன. கடந்த மார்ச் 1-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீடிக்கும் விவகாரத்தில் இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இந்நிலையில், தங்களிடம் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் ஹமாஸ் அழிவை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும். படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை உடனே ஒப்படைக்க வேண்டும். இதை நிறைவேற்றாவிட்டால் ஹமாஸ் அமைப்பு முழுமையாக அழிக்கப்படும்.
மனநலம் இல்லாதவர்கள் தான் சடலங்களை தாங்களே வைத்துக் கொள்வார்கள். அந்த வகையில் ஹமாஸ் அமைப்பினர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். காஸா விவகாரத்தில் இஸ்ரேல் தனது பணிகளை நிறைவேற்றுவதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
எச்சரிக்கையை நிராகரித்த ஹமாஸ்:
அமெரிக்க அதிபர் டிரம்பின் எச்சரிக்கையை நிராகரித்த காஸா, நிரந்தரமாக போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக் கொண்டால் மட்டுமே பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த ஜனவரி 15-ஆம் தேதி இஸ்ரேலுக்கும் காஸாவிற்கும் இடையே கையொப்பமான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமி நெதன்யாகும் அமெரிக்க அதிபர் டிரம்பும் மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டினர்.
அமெரிக்கா-ஹமாஸ் நேரடி பேச்சுவார்த்தை:
கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பினருடன் தங்கள் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார். ஹமாஸ் அமைப்பினருடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்ற கொள்கையை கடைப்பிடித்து வந்த நிலையில் தற்போது டிரம்ப் அரசு அந்த கொள்கையை கைவிட்டு ஹமாஸ் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






