Sri Lanka New Prime Minister Harini Amarasuriya : நமது அண்டை மாநிலமான இலங்கையில் 2022ம் ஆண்டு நடந்த பொருளாதார நெருக்கடிக்கு பிறகு கடந்த சனிக்கிழமை அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசா மற்றும் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயகே உள்பட மொத்தம் 38 வேட்பாளர்கள் களமிறங்கினர்.மொத்தம் 1 கோடியே 40 லட்சம் பேர் தேர்தலில் வாக்களித்தனர். சுமார் 75% வாக்குகள் பதிவாகின.
வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரத்தில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. தொடக்கம் முதலே அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். ஆனாலும் முதல் சுற்றில் பெரும்பான்மைக்கு தேவையான 50% வாக்குகளை யாரும் பெறாததால், 2வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் அநுர குமார திசாநாயகே 55% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
அவருக்கு கடும் போட்டி அளித்த சஜித்பிரேமதாசா 44% வாக்குகளை பெற்றார். ரணில் விக்ரமசிங்கே 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். தேர்தலில் வெற்றி பெற்ற அநுர குமார திசாநாயகே இலங்கை அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இலங்கையில் இடதுசாரி தலைவர் ஒருவர் அதிபராக பதவியேற்பது இதுவே முதன்முறையாகும். பதவியேற்ற கையோடு, இலங்கையில் சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் அனைவருக்கும் சமமான உரிமை அளிக்கப்படும் என அநுர குமார திசாநாயகே வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையின் 16வது பிரதமராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் எம்.பி, டாக்டர் ஹரினி அமரசூரிய நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிபர் அநுர குமார திசாநாயகே வெளியிட்டுள்ளார். 54 வயதான ஹரினி அமரசூரிய புகழ்பெற்ற கல்வியாளர் ஆவார். 2020ம் ஆண்டுக்கு பிறகு தேசிய மக்கள் சக்தி கட்சியின் எம்.பியாக தேர்வானார். சிறந்த சமூக சேவகரான இவர் இலங்கையில் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சமூக படிப்புகளுக்கான துறையில் மூத்த விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். இலங்கையில் வேலைவாய்ப்பின்மை, பாலின சமத்துவமின்மை, குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்ததற்காக ஹரினி அமரசூரிய நாடு முழுதும் அறியப்பட்டார்.
தனது கல்வி சேவக்காகவும், சமூக நீதிக்காவும் பெரும் பங்காற்றிய ஹரினி அமரசூரிய பிரதமராக நியமனம் செய்யப்பட்டது இலங்கை வரலாற்றில் குறிப்பிட்டத்த சாதனையாக பார்க்கப்படுகிறது. இலங்கை பிரதமராக பதவியேற்கும் 3வது பெண் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆவார். இதற்கு முன்பு சிறிமாவோ பண்டாரநாயக்கா மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகிய பெண்கள் இலங்கை பிரதமராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.