IND vs NZ: 25 ஆண்டுகால பகையை தீர்க்குமா இந்தியா.. இறுதிப்போட்டியில் யாருக்கு வெற்றி..?

2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது போலவே இந்த சாம்பியன் டிராபி போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. சாம்பியன் டிராபி தொடரில், 25 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா நேருக்கு நேர் மோதுகின்றனர்.

Mar 7, 2025 - 12:43
Mar 7, 2025 - 16:52
 0
IND vs NZ: 25 ஆண்டுகால பகையை தீர்க்குமா  இந்தியா.. இறுதிப்போட்டியில் யாருக்கு வெற்றி..?
IND vs NZ: 25 ஆண்டுகால பகையை தீர்க்குமா இந்தியா.. இறுதிப்போட்டியில் யாருக்கு வெற்றி..?

Champions Trophy: 

இந்தியாவை பொறுத்தவரைக்கும் கிரிக்கெட்டை ரசிகர்கள் ஒரு திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவிற்கு என்று ஒரு தனி இடம் உண்டு. ஒவ்வொரு காலக்கட்டத்திலும், ஒவ்வொரு தொடரிலும் விளையாடி வரும் அனைத்து வீரர்களும் ஒரு உலக சாதனையையும் யாராரும் முறியடிக்க முடியாத சாதனைகளையும் நிகழ்த்தி உள்ளனர்.

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா முதல் அணியாக தகுதிப் பெற்றுள்ளது.  சாம்பியன்ஸ் டிராபி தொடரில், பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய எட்டு அணிகள் பங்கேற்றன. பாகிஸ்தானில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகிறது. 

உற்சாகத்தில் ரசிகர்கள்:

2025 சாம்பியன் டிராபி தொடரை பொறுத்தவரைக்கும் இந்திய அணி, மற்ற அணிகளால் அசைக்க முடியாத அணியாக உள்ளது. 'குரூப் ஏ பிரிவில் பங்கேற்றுள்ள இந்திய அணி, வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளை லீக் போட்டிகளில் வீழ்த்தி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி உட்பட, இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெற்றாலும், நாடு கடந்து சென்று இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். 

இந்தியாவும், நியூசிலாந்தும் சாம்பியன்ஸ் டிராபியில் ஒரே பிரிவில் இடம்பெற்ற நிலையில், நியூசிலாந்தை வீழ்த்தி, தரவரிசைப்பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றது.  லீக் போட்டிகளில் நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்தி இருந்தாலும், இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியதே இல்லை என்ற சோக வரலாறு 25 ஆண்டுகள் கடந்தும் நீடித்துக் கொண்டிருக்கிறது. 

20 வருட கனவு

தற்போது 2025 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்த இரு அணிகள், 25 ஆண்டுகளுக்கு முன்பு பலப்பரீட்சை நடத்தின. ஸ்டீபன் பிளெம்மிங் தலைமையிலான நியூசிலாந்து அணியும், சௌரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியும் மோதிய அந்த இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது. 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்த இந்திய அணியில், கேப்டன் சௌரவ் கங்குலி அசத்தல் சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து சச்சின் 69 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸில், 264 என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக Criag spearman மற்றும் Nathan Hastle அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் பிளெம்மிங் உட்பட அடுத்தடுத்த வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அப்போதுதான், நியூசிலாந்து அணிக்கு தூணாக நின்று வெற்றிக்கு வித்திட்டார் Chris cairns. அவரின் அபார சதத்தால் 49.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்து கோப்பையை தட்டித்தூக்கியது நியூசிலாந்து அணி. இரண்டு பந்துகள் மட்டுமே மிதமிருக்க, இந்தியாவின் கோப்பை கனவை தகர்த்திருந்தது நியூசிலாந்து. 

இந்த நிலையில், 2025 சாம்பின்ஸ் டிராபியின் லீக் மேட்ச்சில் நியூசியை துவம்சம் செய்த இந்திய அணி, 25 ஆண்டுகள் கழித்து இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியும் இந்தியாவுக்கு மிகவும் சவால் நிறைந்த ஒன்றாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. காரணம், சாம்பியன்ஸ் டிராபியில் ஸ்பின் பவுலிங்கில் இந்தியாவுடன் போட்டியிடக்கூடிய அல்லது நெருங்கடி தரக்கூடிய அணி ஏதேனும் இருக்கிறது என்றால் அது நியூசிலாந்து அணி தான். லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர் மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியில், மைக்கேல் பிரேஸ்வெல், க்ளென் பிலிப்ஸ் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். லீக் மேட்ச்சில் இந்தியா நியுசிலாந்தை சமாளித்து வெற்றி பெற்றிருந்தாலும், இந்த முறை எல்லா நிலைமைகளிலும் சரியாக என்ன செய்ய வேண்டும் என்பதை நியூசிலாந்து முழுமையாக அறிந்திருக்கும். பாகிஸ்தானுக்கு எதிரான மேட்சில் இந்தியா ஆடிய அதே மைதானத்தில் இறுதி போட்டி நடைபெறுவதால், சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய ரோலை பிளே செய்வார்கள் என்று கணிக்கப்படுகிறது. 

பலம் வாய்ந்த நியூசிலாந்து

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவை ஆச்சரியப்படுத்தப்போவது என்னவென்றால் அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது நியூசிலாந்து வீரர்களால், புதுப்பந்துகளின் தன்மையை எளிதாக கணிக்க முடியும். இதற்கு அவர்களிடம் உள்ள வேகப்பந்து வீச்சாளர்களின் உயரம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களின் Extra bounceகள், சமீப காலமாக இந்திய அணி விளையாடும் ஐசிசியின் அனைத்து விதமான போட்டிகளிலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறது. 

இந்தியாவுடனான லீக் மேட்சில், தங்கள் ஃபீல்டிங் மூலம் நியூசிலாந்து அணி களத்தில் 30-40 ரன்களை சேமிக்கும் திறன் கொண்டது என்பதை நிரூபித்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த ஃபீல்டர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் என நியுசிலாந்தின் ஃபீல்டிங் அண்ட் பவுலிங் சைட் செம்ம ஸ்டிராங்காக உள்ளது. 

பேட்டிங்கை பொறுத்தவரை, ரச்சின், யங் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் வேகமான தொடக்கத்தை கொடுத்தால், மிடில் ஆர்டருக்கு ஒரு அடித்தளத்தை உருவாக்க போதுமான நேரம் கிடைக்கும். பெரும்பாலான அணிகள் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்த்துப் போராடினாலும், டாம் லாதம், டேரில் மிட்செல் மற்றும் பிலிப்ஸ் போன்றவர்கள் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் என்பதால், நியூசிலாந்து அணியால் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும் என்று கூறப்படுகிறது. 

எனவே, நியூசிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டம் லீக் மேட்ச்சைவிட மிக வித்தியாசமான ஆட்டமாக இந்தியாவுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரைக்கும், துபாய் மைதானமே ஒரு சாதகமான ஒன்றாக உள்ளது. காரணம் இந்தியா விளையாடியுள்ள 4 போட்டிகளும் துபாய் மைதானத்தில் நடந்த நிலையில், அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

பழிவாங்க காத்திருக்கும் இந்தியா

இந்தியாவுடைய பேட்டிங் லைனை பொறுத்தவரை, ரோகித், விராட், கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், ஹர்திக், போன்றோர் பலம் வாய்ந்தவர்களாக உள்ளனர். பவுலிங் லைனை பொறுத்தவரைக்கும், ஷமி, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஆல்ரவுண்டர் ஹர்திக், ஜடேஜா போன்றோர் செம்ம ஃபார்மில் இருக்கிறார்கள். ஏற்கனவே லீக் மேட்ச்சில் நியூசிலாந்தை வீழ்த்திய நம்பிக்கையோடும், பலத்தோடும் இந்திய அணி இறுதிப்போட்டியை நோக்கி பயணிக்கிறது. 

இந்த நிலையில், இறுதிபோட்டியில் மிகப்பெரிய ரோலை பிளே செய்ய போவது டாஸ் தான். நியூசிலாந்து ஒருவேளை டாஸை வெல்லும்பட்சத்தில், பவுலிங்கை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகளே அதிகம். இந்தியாவை 250 ரன்களுக்குள் சுருட்டவேண்டும் என்பதே அவர்களின் இலக்காக இருக்கும். ரோகித், கில், விராட், ஹர்திக், கே.எல். ராகுல் விக்கெட்டை மிக விரைவாக வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்திலே நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்யும். அதிரடியாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி, குறைவான இலக்கை துரத்துவதே நியூசிலாந்து அணியின் எண்ணமாக இருக்கும். 

ஒருவேளை இந்தியா டாஸை வெல்லும்பட்சத்தில் நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்யவே அழைப்பார்கள். நியூசிலாந்து அணியை அதிர ரன்கள் அடிக்க விடாமல் சுருட்டுவதே இந்திய அணி எதிர்ப்பார்க்கும். இந்தியாவை பொறுத்தவரை துபாய் ஆடுகளத்தில் நியூசிலாந்தைவிட அதிக போட்டிகளில் விளையாடி உள்ள அனுபவம் இருப்பதால், ஆடுகளம் இந்தியாவிற்கே சாதகமாக மாறும் என்று கணிக்கப்படுகின்றது. 

எனவே, 25 ஆண்டுக்காலம் கழித்து சாம்பியன் டிராபி இறுதிப்போட்டியில்,  இந்தியா – நியூசிலாந்து நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தும் நிலையில், அணிகளுக்கு 50 – 50 சதவீதம் வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow