”நீயெல்லாம் புல்லட் ஓட்டுவியா” சாதி வெறியில் அரிவாள் வெட்டு கல்லூரி மாணவன் கவலைக்கிடம்!
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவனின் கைகளை, புல்லட் ஓட்டியதற்காக அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படங்களில் வரும் சம்பவம் போல, மானாமதுரையில் நடந்துள்ள கொடூரம் குறித்து, இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள மேலப்பிடவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி. இவர் தனது அம்மா, அண்ணன் ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். சிவகங்கையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதவியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் அய்யாசாமி, புல்லட் பைக் வைத்திருப்பதாக தெரிகிறது. தனது வீட்டிற்கு பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, சாலையின் குறுக்கே ஒரு முதியவர் நடந்து போனதாகவும், அவரிடம் பார்த்துப் போங்க என அய்யாசாமி கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனை கவனித்த, அதே கிராமத்தைச் சேர்ந்த வினோத், ஆதி ஈஸ்வரன், வல்லரசு ஆகியோர், அய்யாசாமியிடம் ‘நீ என்ன பெரிய ஆளாடா’ என தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது, வினோத் தான் மறைத்து வைத்திருந்த வாளால், அய்யாசாமியின் இரு கைகளிலும் வெட்டியுள்ளார். அவர்களிடமிருந்து தப்பிய அய்யாசாமி, தனது குடும்பத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். இந்நிலையில், தற்போது இந்தச் சம்பவம் குறித்து பல பகீர் தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது அய்யாசாமி மீது நடத்தப்பட்ட தாக்குதல் சாதி ரீதியாக நடத்தப்பட்டதாகவும், அவர் புல்லட் ஓட்டிச் சென்றது பிடிக்காததால், அதை காரணமாக வைத்தே அரிவாளால் வெட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அய்யாசாமியின் அண்ணன், முனியசாமி, கடந்த ஒரு வருடத்திற்கு முன், புதிதாக புல்லட் பைக் வாங்கியது பிடிக்காமல், அதனை அடித்து நொறுக்கினர். பிறகு ஊரில் வைத்து பேசி முடித்தோம். இப்போது மீண்டும் அய்யாசாமியை திட்டமிட்டு வெட்டியதாக கூறியுள்ளார். முக்கியமாக, அந்த ஜாதில இருந்துட்டு, எங்க முன்னாடி எப்படிடா புல்லட் ஓட்டலாம் எனக் கூறி, அய்யாசாமியை வெட்டியதாக புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், நாங்கள் படிப்பது, வீடு கட்டுவது, பைக் ஓட்டுவது உட்பட எதுவும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. கீழ் சாதிக்காரன் எதற்கு இதையெல்லாம் செய்கிறீர்கள் எனக்கூறி சாதி ரீதியாக கொடுமைப்படுத்துவதாக முனியசாமி தனது வேதனையை தெரிவித்துள்ளார். அதேபோல் அவர்களை நாங்கள் ஐயா, சாமி என்றுதான் அழைக்க வேண்டும் என்றும் ஆர்டர் போடுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய வினோத், ஆதி ஈஸ்வரன் மற்றும் வல்லரசு ஆகிய மூன்று பேரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர். சாதிகளை கடந்து சமூக நீதி தான் தங்களது லட்சியம் என கூறிக்கொண்டிருக்கும் தமிழக அரசு, இதுபோன்ற சம்பவங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. சாதிய ரீதியான கொடூரங்கள் இனியாவது நடக்காமல் இருக்க, காவல்துறையும் விழிப்புடன் இருப்பது இச்சம்பவம் மூலம் அவசியமாகியுள்ளது.
What's Your Reaction?






