கைதிகளுக்கு போதைப்பொருள், செல்போன் சப்ளை... வக்கீல்களுக்கு டிஜிபி கட்டுப்பாடு
சிறைகளில் கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு டிஜிபி அலுவலகம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடியான நாகேந்திரன் சிறையில் இருந்து கொண்டே அவரது மகன் வழக்கறிஞரான அஸ்வத்தாமன் மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதும் கொலையை அரங்கேற்றியது விசாரணையில் வெளியானது. இதில் பல வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிறையில் இருந்து ரவுடிகள் வழக்கறிஞர்கள் மூலம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்களா உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 396 வழக்கறிஞர்கள் 84 ரவுடிகளை 1987 தடவை சந்தித்ததாக தெரியவந்துள்ளது.
சிறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்து உரிய அனுமதி அளித்தால் மட்டுமே, வழக்கறிஞர்கள் தங்கள் வாதிகள் ஆன கைதிகளை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு, சந்திக்கும் வழக்கறிஞர்கள் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு மட்டுமே கைதிகளை சந்திக்க வேண்டும்.
இதில் சில வழக்கறிஞர்கள் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை கைதிகளுக்கு கொடுப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் சில வழக்கறிஞர்கள் ரவுடிகளை சந்தித்து கட்டப்பஞ்சாயத்து போன்ற விவகாரத்தில் உதவுவதாகவும் மிரட்டி சொத்துக்கள், வாங்குவதற்கு உடந்தையாக இருப்பது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு வழக்கறிஞர்கள் கைதிகளுடன் சேர்ந்து ஒருங்கிணைந்த குற்றங்கள் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டபூர்வமான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக டிஜிபி அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், இது வழக்கறிஞர்கள் தொழிலுக்கு எதிரானது எனக்கூறி இந்த சுற்றறிக்கையை திரும்பப் பெறுமாறு கூறி தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது.
முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் சிறைக் கைதிகளை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், விசாரணை கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு ஆன்லைனில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.
ஒரு நேரத்தில் ஒரு கைதியை மட்டுமே சந்திக்க அனுமதி வழங்கப்படும் என விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். மேலும், இண்டர்காமில் மட்டுமே பேச வேண்டும் எனக் கூறுவதன் மூலம், அந்த உரையாடல்கள் பதிவு செய்யப்படுகிறதோ என்ற அச்சம் கைதிகள் மத்தியில் உள்ளதாக விசாரணையின் போது தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






