Purattasi Pradosham 2024 : பிரதோஷ வழிபாட்டிற்காக சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Purattasi Pradosham 2024 in Sathuragiri Temple : புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Sep 30, 2024 - 15:28
Sep 30, 2024 - 21:04
 0
Purattasi Pradosham 2024 : பிரதோஷ வழிபாட்டிற்காக சதுரகிரி கோயிலில்  குவிந்த பக்தர்கள்!
பிரதோஷ வழிபாட்டிற்காக சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Purattasi Pradosham 2024 in Sathuragiri Temple : மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. நான்கு புறமும் மலைகள் சூழ்ந்துள்ளதால் இப்பகுதி ‘சதுரகிரி’ என அழைக்கப்படுகிறது. ஒட்டு மொத்த மலைகளின் அமைப்பு, சதுர வடிவில் இருப்பதாலும் இப்படி அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இம்மலையில் ஏராளமான மருத்துவ மூலிகைகள் உள்ளதால் இதன் அருமைகளை உணர்ந்த பல சித்தர்கள் இங்கு தங்கி, தீராத நோயுள்ள மக்களுக்கு சித்த மருத்துவம் செய்து அருளியதாக வரலாறு கூறுகிறது. கோரக்கர், சட்டைமுனி போன்ற சித்தர்கள் தவம் செய்வதற்காகவும் தத்துவ ஆராய்ச்சி செய்வதற்காகவும் இங்கு வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என நம்பப்படுகிறது. 

இக்கோயிலின் சுயம்பு மூர்த்தியான சிவபெருமான், சற்று சாய்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். திருமணத்தடை நீங்கவும் , குழந்தை பாக்கியம் பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமியை வேண்டிச் செல்வது வழக்கம். மேலும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோயில்(Arulmigu Chathuragiri Sundara Mahalingam Temple), தீராத நோய்களை தீர்க்கும் தலமாகக் கருதப்படுகிறது. 

இக்கோயிலில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி, தைப்பூசம், ஆடி அமாவாசை போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த மாதம் பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெறுவது சிறப்பாகும். இந்த நிலையில் புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும்  அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (செப். 30) முதல் அக்டோபர் 3ம் தேதி வரை மொத்தம் 4 நாட்களுக்கு பக்தர்கள் கோயிலுக்கு செல்லலாம் என கூறப்பட்டது. இன்று (செப். 30) புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோயிலில் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

மேலும் படிக்க: 5% குறைந்த சாலை விபத்துகள்... தமிழக காவல்துறை தகவல்!

இந்நிலையில் திடீரென மழை பெய்தால் பக்தர்கள் கோயிலுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் மலைப் பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும் , கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் குளிப்பதற்கு அனுமதி இல்லை எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500  அடி உயரத்தில் அமைந்துள்ளது. முந்தைய காலங்களில் இந்த கோயிலுக்கு செல்ல தினந்தோறும் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 10 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அன்றிலிருந்து பக்தர்களின் பாதுகாப்பு கருதி சிறிதளவு மழை பெய்தாலும் மலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow