மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா. இந்த திருவிழா 15 நாட்கள் கொண்டாடப்படுகிறது. பங்குனிப் பெருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
இந்நிலையில், திருவிழாவின் 5-ஆம் நாளில் கைப்பார உற்சவ திருவிழா நடைபெற்றது. இது திருப்பரங்குன்றம் கிராமத்தார் சார்பில் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இதில் கோயிலில் மிக அதிக எடை கொண்ட வெள்ளி யானை வாகனத்தை பக்தர்கள் தங்கள் உள்ளங்கைகளில் வைத்து தூக்கி வருவர்.
இத்திருவிழாவானது இந்திரனின் வெள்ளை யானையில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையோடு பறந்து வருவதை குறிக்கும் வகையில் கொண்டாடப்படுவதாக கிராமத்தார் தெரிவிக்கின்றனர். இதனையொட்டி சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார்.
தொடர்ந்து கொத்தாளத்து முக்கு பகுதியில் இருந்து கிராமத்தார் தங்களது உள்ளங்கைகளில் வாகனத்துடன் சுவாமியை பெரியரத வீதியிலிருந்து கோயில் வாசல் வரையும், பின்பு கோயில் வாசலிலிருந்து மீண்டும் பெரியரத வீதி வரையும் தூக்கி வீதி உலா வந்தனர்.
இந்த உலாவின் போது சுவாமியை வலது புறம், இடது புறமாக சாய்த்து பக்தர்கள் வெள்ளத்தில் எடுத்து வந்தனர். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
Read more:-
பொக்காபுரம் மாரியம்மன் தேர் திருவிழா.. வண்ண குடைகளுடன் அம்மனை அழைத்து வந்த மக்கள்