நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் பொக்காபுரம் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. புலிகள் வாழும் அடர்ந்த காட்டிற்குள் அமைந்துள்ள இந்த அம்மனை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில், பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் பவனி இன்று நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தேரை வடம் பிடித்து இழுத்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தார். பாரம்பரிய உடை அணிந்த படுகர் இன மக்கள் வண்ண வண்ண குடைகளுடன் தேரில் அருள் பாலித்த பொக்காபுரம் மாரியம்மனை கோயிலை சுற்றி அழைத்து வந்தனர்.
ஏராளமான பக்தர்கள் உப்பு இறைத்து அம்மனை வழிபட்டனர். இன்று திருத்தேர் பவனி என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்து அம்மனை வழிபட்டனர். 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் தமிழகம் மட்டுமின்றி கேரள, கர்நாடக போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து பொக்காபுரம் மாரியம்மன் அருள் பெற்று சென்றனர்.