சீமானுக்கு திரள்நிதி கொழுப்பு! மைக்கை பார்த்தால் உளறுவார்... திரண்டு வந்த தவெக படை!
விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பை பணக்கொழுப்பு என விமர்சித்த சீமானை, தவெக நிர்வாகிகள் சுளுக்கெடுத்து வருகின்றனர். சீமானுக்கு திரள்நிதி கொழுப்பு என்றும், மைக்கை பார்த்தால் உளறுவது தான் அவரது வழக்கம் எனவும் அடுத்தடுத்து அட்டாக் செய்து வருகின்றனர். அதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்....

கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான விஜய், தமிழகத்தின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கனவுடன் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளார். அவரது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது. இதன் முதற்கட்டமாக சமீபத்தில் தவெகவின் புதிய நிர்வாகிகளின் பட்டியலை விஜய் வெளியிட்டார். அதேவேகத்தில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரை, பனையூரில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார் விஜய். இந்த நிகழ்வுகள் அனைத்தும், ஆதவ் அர்ஜுனாவின் ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கடந்த 2021 தேர்தலில், திமுகவுக்காக தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்த பிரஷாந்த் கிஷோர், தற்போது விஜய் உடன் கைகோர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவெகவுக்கு பலமா அல்லது பலவீனமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில், விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரசாந்த் கிஷோருக்கு தமிழகத்தைப் பற்றி என்ன தெரியும்? அவருக்கு இங்குள்ள பிரச்சனைகள் குறித்து தெரியுமா? பணக்கொழுப்பு இருப்பவர்களுக்குத்தான் இதுபோன்ற வியூகங்கள் எல்லாம் தேவைப்படும். அதைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். என்னிடம் காசு இல்லை... மூளை இருக்கிறது என தனது ஸ்டைலில் பஞ்ச் கொடுத்தார்.
சீமானின் இந்த பேச்சுக்கு, தவெக நிர்வாகிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தவெக கொள்கைப் பரப்பு இணை செயலாளர் லயோலா மணி, “உழைத்து சம்பாதிப்பதற்கும், திரள் நிதி மூலம் சம்பாதிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. திரள் நிதியால் கொழுப்பை வளர்த்து கொண்டிருப்பவர்கள் எங்களை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை” எனக் கூறியுள்ளார். அதேபோல், தவெகவின் மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் முனைவர். சம்பத்குமார், அறிக்கை வெளியிட்டு சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
செய்தித் தொலைக்காட்சிகளின் மைக்கை பார்த்துவிட்டால், அண்ணன் சீமானுக்கு உளறுவதே வழக்கமாகிவிட்டது. இப்போதையை அரசியல் சூழலில், தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களின் அவசியத்தை புரிந்துகொள்ளாமல் பணக் கொழுப்பு என பகிரங்கமாக விமர்சித்துள்ள சீமானுக்கு, நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை எனத் தெரிகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத் தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட சீமான், இன்னும் எத்தனை ஆண்டுகள் "வென்றால் மகிழ்ச்சி,. தோற்றால் பயிற்சி" என்று நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை என்று சம்பத்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது சீமானுக்கு தவறாக தான் தெரியும். சட்ட மன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்வது தவெக வழக்கம், ஆனால், சீமானோ பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று சாடியுள்ளார் சம்பத்குமார்.....
தமிழக வெற்றிக் கழகமோ தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்று சிந்திக்கிறது.... ஆனால் சீமானோ தமிழ்தேசிய அரசியலை எப்படி வெற்றிப் பெறாமல் வைத்திருப்பது என்று சிந்திக்கிறார் என்றும் த.வெ.க. தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
பிரபாகரனிசத்தை முன்வைத்து கட்சி தொடங்கிய அவர், இப்போது சீமானிசத்தில் கொண்டு போய் கட்சியை நிறுத்தியிருக்கிறார். விஜய் தன் ரசிகர்களை அரசியல் கட்சியின் தொண்டர்களாக உருமாற்றம் செய்து வரும் நிலையில், சீமானோ நாதக தொண்டர்களை அவரது ரசிகர்களாக உருமாற்றம் செய்து வருகிறார். என்றும் உங்களோடு ஒத்து போகாது என மிக காட்டமாக விமர்சித்துள்ளார் சம்பத்குமார்......
விஜய் கட்சி தொடங்குவதாக அறிவித்ததில் இருந்தே சீமான் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். ஆனால் கட்சியின் முதல் மாநாட்டில் சீமானின் கொள்கைகளையும் விஜய் வறுத்தெடுத்ததால், ஏகத்துக்கும் டென்ஷனான சீமான் அன்றிலிருந்து விஜயை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்.... நாம் தமிழர் கட்சியினரும் த.வெ.க. கொள்கைகள் மற்றும் நிலைப்பாட்டை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். ஆனால் நா.த.க.-வின் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் த.வெ.க. தரப்பு கடந்து சென்றது.......
த.வெ.க.-வின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான பெரியாரை சீமான் கடுமையாக விமர்சித்தபோதும் கூட த.வெ.க. அமைதிகாத்தது. சீமானை விஜய் கண்டிக்காதது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பியபோது, நாங்கள் தனிமனித தாக்குதலில் ஈடுபட மாட்டோம் என்று த.வெ.க.-வினர் கடந்து சென்றனர்......
ஆனால் தற்போது முதல் முறையாக சீமானின் விமர்சனத்திற்கு த.வெ.க. தரப்பில் இருந்து சுடச்சுட பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் தங்கள் மீது தொடுக்கப்படும் அம்புகளை த.வெ.க. இதே வேகத்தோடு எதிர்கொள்ளுமா..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்....
What's Your Reaction?






