சட்டசபையில் கலவரம் நடத்த அதிமுக திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் பகீர் புகார்
சட்டசபையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி செய்கிறார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் நான்காம் நாள் கூட்டத் தொடர் இன்று காலையில் தொடங்கியது. அதிமுக எம்எல்ஏக்கள் இன்றைய தினமும் கறுப்பு சட்டை அணிந்து வந்தனர். கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அதிமுகவினர் முழக்கமிட்டனர். சபாநாயகர் அனுமதி மறுக்கவே அவரை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அனைவரையும் வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சட்டசபையில் கடந்த 20ஆம் தேதி நான் விளக்கம் அளித்தேன். பிரதான எதிர்கட்சியான அதிமுக அன்றைய தினம் விவாதத்தில் பங்கேற்று பேசியிருக்க வேண்டும் ஆனால் அவர்கள் பங்கேற்காமல் அமளியில் ஈடுபட்டு வெளியேற்றப்பட்டனர்.
கேள்வி நேரம் முடிந்த பின்னர் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து விவாதிக்கப்படும் என்று சபாநாயகர் பலமுறை எடுத்துக்கூறியும் அதனை கேட்க அதிமுக உறுப்பினர்கள் தயாராக இல்லை. சட்டசபையில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டே அமளியில் ஈடுபடுகின்றனர்.40க்கு 40 அவர்களின் மனதையும் கண்ணையும் உறுத்துகிறது. இதனை எப்படி திசை திருப்புவது என்று எண்ணி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கை தொடர்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் தகுந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
ஆர்ப்பாட்டம் என்பது நியாயம் தான். ஜனநாயகத்தில் இருக்கக்கூடிய உரிமை அது. ஆனால் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ விசாரணை வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது அவர் மீது ஒரு குற்ற வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என்று திமுக சார்பில் கோரிக்கை வைத்த போது சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை போட்ட விராதி வீரர் தான் எடப்பாடி பழனிச்சாமி என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
What's Your Reaction?