TVK Vijay: தவெக மாநாடு பந்தக்கால் நடும் விழா... தலைவர் விஜய் பங்கேற்பு..? ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, இந்த மாதம் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பந்தக்கால் நடும் விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Oct 3, 2024 - 16:13
 0
TVK Vijay: தவெக மாநாடு பந்தக்கால் நடும் விழா... தலைவர் விஜய் பங்கேற்பு..? ஏற்பாடுகள் தீவிரம்!
தவெக மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் விழாவில் விஜய் பங்கேற்பு?

சென்னை: தமிழ்த் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய், சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் தடம் பதிக்கவுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய விஜய், அதன் கொடி, பாடல் ஆகியவற்றையும் அறிமுகம் செய்தார். அதன் தொடர்ச்சியாக தனது கட்சியின் முதல் மாநில மாநாடு நடத்துவதில் பிஸியாகவுள்ள விஜய், இன்னொரு பக்கம் தனது கடைசிப் படத்துக்கும் கால்ஷீட் கொடுத்துள்ளார். ஹெச் வினோத் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் இந்த வாரம் தொடங்கவுள்ளது. அதேபோல், தவெக மாநாட்டுக்கான பந்தக்கால் நிகழ்ச்சியும் நாளை நடைபெறவுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி சாலை பகுதியில் தவெக மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாநாட்டுக்காக 100 ஏக்கருக்கும் மேலான இடம் பயன்படுத்தப்படவுள்ளது. இதனையடுத்து மாநாட்டுக்கான பூமி பூஜை நாளை காலை 4:30 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநாடு நடத்த 90 ஏக்கர் இடம், பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்காக 80 ஏக்கர் இடம் ஆகியவற்றை 25 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கொடுத்துள்ளனர். இந்த குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், வீடு வீடாகச் சென்று அழைப்பிதழ் வழங்கி மாநாடு பூமி பூஜைக்கு அழைப்பு விடுத்தார்.  

தவெக மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் விழா நாளை காலை திட்டமிட்டபடி நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு புனித ஆலயங்கள், நதிகளில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டுள்ளதாம். மேலும் அந்த நீரினை மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் வைத்து பூஜை செய்த பின்னர், பூமி பூஜைக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பந்தக்கால் நடப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநாடு தொடர்பான முதல் நிகழ்ச்சி இது என்பதால், விஜய் கண்டிப்பாக பங்கேற்பார் எனத் தெரிகிறது.

அதேபோல், விஜய்யுடன் அவரது அம்மா, அப்பா ஆகியோர் கலந்துகொள்வார்களா எனத் தெரியவில்லை. தவெக கொடி அறிமுக நிகழ்ச்சியில் விஜய்யின் அம்மாவும் அப்பாவும் பங்கேற்றிருந்தனர். இதனால் மாநாட்டுக்கான பந்தக்கால் விழாவிலும் விஜய்யின் பெற்றோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட மிக முக்கியமான நிர்வாகிகள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow