கல்வித்துறையை குமரகுருபரன் கை கழுவியது ஏன்?.. நிதிச்சுமை காரணமா?...
Kumaragurubaran IAS : 10 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு முயற்சி மேற்கொண்டுவந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திமுக அரசு பதவி ஏற்றது முதல் பள்ளிக்கல்வித்துறைக்கு மூன்றாவது செயலாளரும் மாற்றப்பட்ட நிலையில், தற்போது நான்காவது முதன்மை செயலாளராக மதுமதி ஐஏஎஸ் பதவியேற்றுள்ளார்.
Kumaragurubaran IAS :
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குமரகுருபரன் புதிய செயலாளராக நியமனம் செய்யப்பட்ட நிலையில், 9 மாதங்கள் கூட முழுமையாக முடிவடையாத நிலையில், தற்போது அவர் மாற்றம் செய்யப்பட்டு, நான்காவது செயலாளராக மதுமதி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக ஆட்சியில் செயலாளர்களாக பதவி வகித்த தீரஜ் குமார், காகர்லா உஷா இருவருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். முக்கியமான பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களை நியமனம் செய்தால், நல்ல புரிதல் இருக்கும் என்ற ஆதங்கத்தை பலரும் வெளிப்படுத்தினர். இந்த நிலையில் தான் கல்வியில் பின்தங்கிய மாவட்டமான, விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரைச் சேர்ந்த குமரகுருபரன் பள்ளிக் கல்வித்துறையின் புதிய செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
தமிழகத்தின் கல்வி சூழலையும், ஆசிரியர்கள் மனநிலையையும் உணர்ந்த குமரகுருபரன், குறுகிய காலத்தில் ஆக்கப்பூர்வமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெறக்கூடிய நிலை பல ஆண்டுகளாக நீடித்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து, தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் பணியிட மாறுதல் பெறலாம், பதவி உயர்வு பெறலாம் என்ற அரசாணை 243 வெளியாவதற்கு நடவடிக்கை எடுத்தார்.
ஆசிரியர் நியமனங்களில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்களை நியமனம் செய்யவும் நடவடிக்கை எடுத்தார். மேலும், ஆசிரியர் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை கடிதங்களை பரிசீலனை செய்து, அதை அமல்படுத்துவதற்கு உகந்தவற்றை ஏற்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதேபோன்று ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு, ஜூலை மாதத்திற்கு உள்ளாகவே முடிப்பதற்கு அட்டவணை தயாரிக்கப்பட்டு, அதுவும் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் ஒரு கோடி 25 லட்சம் பெற்றோர்களின் மொபைல் எண்களை திரட்டி, வாட்ஸ் அப் குழு மூலமாக மாணவர்களின் செயல்பாடுகளை பெற்றோர்களுக்கு தெரிவிப்பது, மாணவர்களிடையே உள்ள போதைப் பழக்கங்களை நீக்குவதற்கு புதிய நடவடிக்கை என பல்வேறு பணிகளை செய்துவந்தார்.
மேலும் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, 10 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கும் முயற்சிகளை மேற்கொண்டுவந்த நிலையில், குமரகுருபரன் சென்னை மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு இருப்பது கல்வித் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளிக் கல்வித்துறைக்கு பட்ஜெட்டில் அதிகபட்சமாக 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டாலும், பெரும்பாலான நிதி சம்பளத்திற்கு சென்று விடுகிறது என்றும், அரசு பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும் என்றால், போதிய அளவிற்கு நிதி தேவைப்படுவதை உணர்ந்தும், அதிகளவிலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையும், கல்வித்தரம் பாதிக்கும் என்று உணர்ந்த செயலாளர், இதற்காக கூடுதல் நிதி தேவை குறித்த கருத்துக்களை முன்மொழிந்தார்.
ஆனால் எந்த ஒரு திட்டங்களுக்கும் நிதித்துறையில் உள்ள அதிகாரிகள் நிலையில் இருந்து பெரிய அளவிற்கு ஆதரவு கிடைக்காதது, அவருக்கு சலிப்பை ஏற்படுத்தியதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏராளமான பணிகள் பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய நிலையில், தேவையான நிதியும் கிடைக்காதது, ஆசிரியர் சங்கங்கள் அவ்வப்போது போர்க்கொடி தூக்குவது, போராட்டங்கள் நடத்துவது போன்ற காரணங்களாலும் பள்ளிக் கல்வித்துறையை குமரகுருபரன் கை கழுவியதாக, பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?