டாஸ்மாக் முற்றுகை.. பாஜகவினர் 1,250 பேர் மீது வழக்குப்பதிவு
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 1250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக சென்னையில் 30 இடங்களில் பாஜகவினர் போராட்டத்தை மேற்கொண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதில் சட்ட விரோதமாக கூடியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், எச். ராஜா உள்ளிட்ட 1250 க்கும் மேற்பட்ட பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை தெரிவித்துள்ள 1000 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடச் சென்ற பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை போலீசார் சென்னை அக்கரையில் கைது செய்து இஸ்கான் கோவில் அருகில் உள்ள கோபிநாத் கார்டனில் அடைத்து வைத்தனர்.
மாலையில் விடுவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, டாஸ்மாக் அலுவலகமே மூடிய பின்னும் அடைத்து வைக்கப்பட்டதாகக் கூறியதோடு, காவல்துறை மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாகவும் தெரிவித்தார். அனுமதி கோரும் கடிதங்கள் நிராகரிக்கப்படுவதால் இனி பாஜக முன்னறிவிப்பின்றி போராட்டம் நடத்தும் என்றும், காவல்துறையை இனி தூங்க விடமாட்டோம் எனவும் ஆவேசம் காட்டினார்.
ஒரு வாரத்திற்குள் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு பாஜக போராட்டம் நடத்தும் என்றும் டாஸ்மாக் கடைகளில் முதலமைச்சரின் புகைப்படம் மாட்டப்படும் எனவும் அறிவித்தார். டாஸ்மாக் வழக்கில் முதலமைச்சர் ஸ்டாலின் முதல் குற்றவாளி என்றும் தமிழகத்தின் சட்டத்துறை அமைச்சராக இருக்கத் தகுதியற்றவர் ரகுபதி என்றும் விமர்சித்தார்.
திமுகவின் பி.டீமாக தமிழக வெற்றிக் கழகம் செயல்படுவதாகச் சாடிய அண்ணாமலை, களத்துக்கு வந்து பாருங்கள் என்று விஜய்க்கு அழைப்பு விடுத்தார். இதனிடையே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 1250 பேர் மீது நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் 30 இடங்களில் போராட்டம் மேற்கொண்டதற்காக பாஜகவினர் நேற்று கைது செய்யப்பட்டு, மாலை விடுவிக்கப்பட்டனர்.
What's Your Reaction?






