NEET Paper Leak : நீட் வினாத்தாள் கசிவு: முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த சிபிஐ.. குற்றவாளிகள் எத்தனை பேர்?
NEET Question Paper Leak Case Chargesheet in Patna Court : நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான பாட்னாவின் கோபால்பூரை சேர்ந்த நிதிஷ்குமார், அமித் ஆனந்த், சிக்கந்தர் யாத்வேந்து ஆகியோர் மாணவர்களிடம் ரூ.30 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு நீட் தேர்வு வினாத்தாளை கசிய விட்டது தெரியவந்துள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது.

NEET Question Paper Leak Case Chargesheet in Patna Court : இந்தியாவில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' என்னும் நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. மிகவும் கடினமான இந்த தேர்வுக்கு தேர்ச்சி பெற முடியாததால் ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த மே மாதம் இளநிலை நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
இந்த தேர்வில் முன்கூட்டியே வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.அதாவது முன் எப்போதும் இல்லாத வகையில் அதிக அளவிலான மாணவர்கள் 720க்கு 720 என முழுமையான மதிப்பெண்கள் பெற்றதும், ஒரே தேர்வு மையங்களை சேர்ந்த பலர் முதலிடம் பிடித்ததும் சந்தேகத்தை அதிகரித்தது.
இதனால் நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என போராட்டங்கள் வெடித்தன. இதன்பிறகு நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை ஒப்புக்கொண்ட மத்திய அரசு, இது தொடர்பான விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்தது. இந்த விசாரணையை தீவிரப்படுத்தி வரும் சிபிஐ, நீட் முறைகேடு தொடர்பாக தொடர்ந்து பல்வேறு நபர்களை கைது செய்து வருகிறது.
இதற்கிடையே நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான மனுக்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன. ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீட் தேர்வை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்பதில் உறுதியாக உள்ளனர். இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், முதல் குற்றப்பத்திரிகையை பாட்னா நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தனர்.
நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை 40 பேரை சிபிஐ கைது செய்துள்ள நிலையில், இதில் முக்கியமான குற்றவாளிகள், வழக்கு விவரங்கள் தொடர்பான விவரங்களை குற்றப்பத்திரிகையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது. மிக முக்கியமாக, நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு மூளையாக செயல்பட்ட நிதிஷ்குமார், அமித் ஆனந்த் ஆகியோரின் பெயர்களும், ஆயுஷ் குமார், அனுராக் யாதவ், அபிஷேக் குமார், ஷிவ்நந்தன் குமார். சிக்கந்தர் யாத்வேந்து உள்பட 13 பேரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.
மேலும் நீட் தேர்வு எழுதிய சில மாணவ-மாணவிகளின் பெற்றோர்களின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுவரை நடந்த விசாரணையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான பாட்னாவின் கோபால்பூரை சேர்ந்த நிதிஷ்குமார், அமித் ஆனந்த், சிக்கந்தர் யாத்வேந்து ஆகியோர் மாணவர்களிடம் ரூ.30 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு நீட் தேர்வு வினாத்தாளை கசிய விட்டது தெரியவந்துள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது.
இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவிய மேம்பட்ட தடயவியல் நுட்பங்கள், ஏஐ தொழில்நுட்பங்கள், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிகையுடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக சந்தேகத்துக்கு உரியவர்களிடம், நீதிமன்ற காவலில் உள்ளவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ள சிபிஐ, இது தொடர்பாக மேலும் ஒன்று அல்லது இரண்டு குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
What's Your Reaction?






