2016-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா திரைத்துறையில் அறிமுகமானார். இப்படத்தில் ரக்ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார். அப்போது இருவரும் காதலித்து வருகின்றனர் என்றும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்றும் தகவல் பரவியது. பின்னர், தெலுங்கு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்திய ராஷ்மிகா முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இதையடுத்து நடிகர் ரக்ஷித் ஷெட்டி உடனான திருமணத்தை அவர் நிறுத்தியதாக கூறப்படுகிறது. நடிகை ராஷ்மிகா தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. அதுமட்டுமல்லாமல், இந்திய அளவில் அதிக அளவில் வசூல் சாதனை செய்த இரண்டாவது படம் என்ற பெருமையும் பெற்றது.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா கன்னடத்தை புறக்கணிப்பதாக கார்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கன்னட படமான ‘கிரிக் பார்ட்டி’ மூலம் திரையுலகில் வாழ்க்கையை தொடங்கிய நடிகை ராஷ்மிகா தற்போது கன்னடத்தை புறக்கணிக்கிறார். கடந்த ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க நாங்கள் அழைத்தபோது ராஷ்மிகா மறுத்துவிட்டார்.
என் வீடு ஹைதராபாத்தில் உள்ளது. கர்நாடகா எங்கே இருக்கிறது என தெரியாது. என்னால் வர முடியாது என்று ராஷ்மிகா கூறிவிட்டார். கன்னடத்தை புறக்கணித்த ராஷ்மிகாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டாமா?” என்று ஆவேசமாக கூறினார்.
நடிகை ராஷ்மிகா தற்போது இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ஹிந்திப் படமான 'சிக்கந்தர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரம்ஜான் தினத்தில் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.