Puducherry Budget 2024 Annoucement : புதுச்சேரி சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று புதுச்சேரி ஆளுநர் ராதாகிருஷ்ணன் உரையாற்றினார். இந்த நிலையில், 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை புதுச்சேரி மாநில முதல்வரும், நிதி அமைச்சருமான ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார்.
அதாவது ரூ.12,700 கோடிக்கான பட்ஜெட்டை ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இந்த ஆண்டு முதல் இலவச அரிசி, மானிய விலையில் கோதுமை, பருப்பு வகைகள், சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகிய பொருட்கள் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தல், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்டவை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த பணிபுரியும் பெண்கள், கல்லூரி மாணவிகளுக்கு மின்சார இருசக்கர வாகனம் வாங்குவதற்கு 75% மானியம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களை பெறும் அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ரூ.20,000, ரூ.15,000 மற்றும் ரூ.10,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாடங்கள்வாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் பள்ளி மாணவர்களுக்கு காலணி, புத்தகப்பை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.6,500 ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் மழைக்கால நிவாரணத் தொகை ரூ.3000ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் பழமையான அருங்காட்சியகம் அமைக்கப்படும்; பாரதியார் மற்றும் பாரதிதாசன் அருங்காட்சியகங்கள் மேம்படுத்தப்படும் என முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மடுகரையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியை ரூ.15 கோடியில் மேம்படுத்தி முன்மாதிரி கலைக் கல்லூரியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் ரூ.1 கோடி செலவில் ஹாக்கி திடல் அமைக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மாடி தோட்டம் அமைக்க ஒரு வீட்டிற்கு ரூ.5,000 வழங்கப்படும் என்றும் 400 விவசாயிகளுக்கு தீவனம் தயாரிக்கும் இயந்திரம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் ஆயுஸ் மருத்துவப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் காலை 10 மணிக்கு மேல்தான் பட்ஜெட் வாசிக்கப்படும். ஆனால் இன்று காலை 9 மணிக்கே புதுச்சேரி சட்டப்பேரவை கூடியது. இன்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகு காலம் என்பதால் புதுச்சேரி மாநில முதல்வரும், நிதி அமைச்சருமான ரங்கசாமி நல்ல நேரம் பார்த்து முன்கூட்டியே 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.