மாநகராட்சி அதிகாரிகளுடன் மாட்டு உரிமையாளர்கள் வாக்குவாதம்; ஒருவர் காயம்!
சென்னை மெரினா கடற்கரையில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடிக்கச்சென்றபோது மாடுகளின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் அதிகளவில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனைத் தடுக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் கடுமையான விதிமுறைகளை விதித்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன. சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ. 10,000 விதிக்கப்பட்டதோடு, மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்தும் சென்றனர். ஆனாலும் எவ்வித பயனும் இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரும்பாக்கத்தில் பள்ளி சிறுமியை மாடு கொடூரமாக தாக்கிய வீடியோவும், திருவொற்றியூரில் ஒரு பெண்மணியை மாடு தாக்கிய வீடியோவும் வெளிவந்தபோதும் மாடுகளின் உரிமையாளர்கள் திருந்தாமல் மாடுகளை சாலைகளில் விடுவது வேதனையளிப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை சென்னை மெரினா கடற்கரைதான். இப்படிப்பட்ட பெருமையுடைய மெரினா கடற்கரையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க பொதுமக்கள் தவறுகின்றனர். கடற்கரைக்கு வரும் மக்கள் உணவுகளை கண்டமேனிக்கு வீசிச் செல்கின்றனர். அதனை உண்ணுவதற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் கால்நடைகள் கடற்கரைக்கு அதிகளவில் வருகின்றன.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பூங்கா மற்றும் சமாதி பின்புறத்தில் உள்ள மணற்பரப்பில் மாடுகள் அதிகளவில் சுற்றி திரிவதாகவும், இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாகவும் கூறி மாநகராட்சிக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்களுடன் சென்று இன்று (ஆகஸ்ட் 12) எம்.ஜி.ஆர் சதுக்கம் பின்புறத்தில் உள்ள பகுதிகளில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு மாடுகளை ஊழியர்கள் பிடித்து வண்டியில் ஏற்றிகொண்டிருந்தனர். இதனைக் கண்ட அந்த மாடுகளின் உரிமையாளர்கள் சிலர், அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென மாட்டின் உரிமையாளர்களில் சிலர் வண்டியிலிருந்த மாடுகளை அத்துமீறி இறக்கிய போது, அதை தடுக்க வந்த ஊழியர்களை உரிமையாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தகராறில் மாடு பிடி ஊழியர் வேணு என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஊழியர் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். குறிப்பாக சாலையில் திரியும் மாடுகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடிக்கும்போது, இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இதே போன்ற ஒரு சம்பவம் அண்ணா சதுக்கம் பகுதியில் தற்போது நடைபெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகார் சம்பந்தமாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?






