சுதந்திர தின விழா; சென்னையில் இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!
சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலினின் இல்லத்தில் இருந்து தலைமைச்செயலகம் வரையிலும் செல்லும் வழித்தடங்கள் "சிவப்பு மண்டலமாக (RED ZONE)" அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 78வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தன்று டெல்லி கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி உரையாற்றவுள்ளார். இதையடுத்து அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தலைநகரில் தேசியக்கொடியை ஏற்றி வைப்பர். அதன்படி, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையில் வரும் 15ம் தேதி காலை 9 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சென்னை கோட்டையில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தன்று காலை 8.45 மணிக்கு சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்காக கோட்டைக்கு வரும் முதலமைச்சர் ஸ்டாலினை, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்பார். இதையடுத்து அவருக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோரை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைப்பார். பின்னர் கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து தனது வணக்கத்தை செலுத்துவார்.
இந்த சூழலில் 1973ம், ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 144-ன் கீழ் ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ். ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகர காவல் எல்லையில் பறக்க விட 08.08.2024 முதல் 23.08.2024 வரை தடைசெய்யப்பட்ட ஆணை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு அலுவலின் பொருட்டு. சென்னையில் 14.08.2024 மற்றும் 15.08.2024 ஆகிய இரு நாட்களிலும் தலைமைச் செயலகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினின் இல்லத்தில் இருந்து தலைமைச்செயலகம் வரையிலும் செல்லும் வழித்தடங்கள் "சிவப்பு மண்டலமாக (RED ZONE)" அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த பகுதிகளில் Remotely Piloted Aircraft Systems (RPAS)/Drone மற்றும் எந்தவிதமான பொருட்களும் பறக்கவிட தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
சுதந்திர தினவிழாவையொட்டி ஒத்திகை நிகழ்ச்சியும் கோட்டை கொத்தளத்தில் நடத்தி பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் ஸ்டாலினை மோட்டார் சைக்கிள் புடைசூழ காவல்துறை வாகன அணிவகுப்புடன் அழைத்து வருவது போன்ற ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி கோட்டை கொத்தளத்தில் விருதுகள், பதக்கங்கள் வழங்குவது போன்றும் ஒத்திகை நடத்தி பார்க்கப்பட்டது. மேலும் இவ்விழாவை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
What's Your Reaction?