தமிழக அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் எஸ். எஸ். சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு அரியலூர் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் அருகே திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரன் உள்ளிட்டோர் மீது அரியலூர் போலீசாரால் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரச்சாரம் செய்ததாக, அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மீது தேர்தல் விதி மீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அரியலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த மூன்று வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி அமைச்சர் சிவசங்கரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மீதான மூன்று வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதேபோல, கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, அமைச்சர் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மீது சிவகங்கை மாவட்டம், கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பெரிய கருப்பன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?






