விறுவிறுப்பாக நடைபெறும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. முன்னிலை வகிப்பது யார்?
வயநாடு மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகின்றனர்.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு மற்றும் உத்திரப்பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். ஒரு நபர் இரண்டு தொகுதிகளில் எம்.பி பதவி வகிக்க முடியாது என்பதால் வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் ஆணையம் ராஜஸ்தான், மேற்கு வங்கம், அஸ்ஸாம், பீகார், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், சிக்கிம், கேரளா, சத்தீஸ்கர், மேகாலயா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.
இதையடுத்து காங்கிரஸின் செல்வாக்கு மிக்க வயநாடு தொகுதியை தக்க வைக்கும் நோக்கில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை அத்தொகுதியின் வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது. மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மொகேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மொகேரி, பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் உள்ளனர்.
முதன் முறையாக அரசியல் களத்தில் குதித்துள்ள பிரியங்கா காந்தி தனது முதல் தேர்தலிலேயே அதிரடி காட்டியுள்ளார். இவரின் அரசியல் வருகை எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்த போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதேபோன்று கர்நாடக மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி அமோக பெற்றி பெற்றுள்ளது. சன்னபட்னா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சி.பி. யோகேஷ்வர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மத்திய மந்திரி குமாரசாமி மகனை தோற்கடித்தார். சந்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அன்னபூர்ணா, பாஜகவின் பங்காரா ஹனுமந்தாவை தோற்கடித்துள்ளார். அதேபோல, ஷிக்கான் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமது கான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக எம்.பி பசவராஜ் பொம்மையின் மகனை தோற்கடித்தது வெற்றியை தக்கவைத்துக் கொண்டார்.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அசாத்திய முன்னிலை பெற்றுள்ளனர். உத்திரப்பிரதேசத்தில் நான்கு தொகுதிகளில் பாஜகவும் இரண்டு தொகுதிகளில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் முன்னிலை வகித்து வருகிறது. பீகாரில் இரண்டு தொகுதிகளில் ஆளும் என்டிஏ கூட்டணியும், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆர்ஜேடி, இமாம்கஞ்ச் தொகுதியிலும், பகுஜன் சமாஜ்வாதி கட்சி ராம்கர் தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.
பாலக்காட்டில் நடந்த இடைத்தேர்தலில், யுடிஎஃப் வேட்பாளர் ராகுல் மம்கூத் முன்னிலை வகிக்கிறார். அசாமில் நான்கு தொகுகளில் ஆளும் என்டிஏ கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப்பில் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற நான்கு தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும், பர்னாலாவில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகிக்கிறது.
What's Your Reaction?