கூட்டணிலதான் பங்கு ஆட்சியில இல்லை... எப்போதும் திமுக ஆட்சிதான்! கே.பாலகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதிலடி!

“தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறவில்லை. திமுக ஆட்சிதான் நடைபெறுகிறது. கூட்டணியில் பங்கு இருக்கும், ஆட்சியில் பங்கு என்பது எப்பொழுதும் கொடுத்தது இல்லை” என அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Nov 24, 2024 - 05:48
 0
கூட்டணிலதான் பங்கு ஆட்சியில இல்லை... எப்போதும் திமுக ஆட்சிதான்! கே.பாலகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதிலடி!
கூட்டணிலதான் பங்கு ஆட்சியில இல்லை... எப்போதும் திமுக ஆட்சிதான்! கே.பாலகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதிலடி!

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார் நத்தம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் இன்று (நவ. 23) நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் தீர்மானங்கள் மற்றும் செலவீனங்கள் வாசிக்கப்பட பின்பு தூய்மை பணியாளர்களை அமைச்சர் ஐ. பெரியசாமி கௌரவித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், திமுக, அதிமுக கூட்டணியில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என மாநில சி.பி.எம். செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கூட்டணி என்பது திமுகவை பொருத்தவரையில் ஒரே கருத்துடைய இயக்கங்களான காங்கிரஸ், சிபிஎம், சிறுபான்மை இயக்கம், முஸ்லிம் லீக் தொடர்ந்து 1967 இல் இருந்து கூட்டணியில் உள்ளனர். இன்று நேற்று இல்லை. அது அவர்களின் விருப்பம். இங்கு கூட்டணி ஆட்சி நடைபெறவில்லை. திமுக ஆட்சிதான் நடைபெறுகிறது. ஆட்சியில் நாங்கள் யாருக்கும் பங்கு வழங்கியது கிடையாது. கூட்டணியில் பங்கு இருக்கும். இடம் கேட்பார்கள் அதனை கொடுப்போம். ஆட்சியில் பங்கு என்பது எப்பொழுதும் கொடுத்தது இல்லை” எனத் தெரிவித்தார்.

போதைப்பொருள் விற்பனை காரணமாக குற்றங்கள் அதிகரிக்கிறது, காவல்துறை கையில் வைத்திருக்கும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே பாலகிருஷ்ணன் கூறியது குறித்து பேசிய  அமைச்சர் ஐ. பெரியசாமி, “முதலமைச்சர் அதிகமான அக்கறை எடுத்து வருகிறார். ஒன்றிய செயலாளர் மாவட்ட செயலாளர் என எவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய முதலமைச்சராக ஸ்டாலின் இருந்து வருகிறார். வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என பார்க்க மாட்டார். சட்ட ஒழுங்கு நிலை நாட்டுவதில் உறுதியாக இருப்பார்கள். முந்தைய ஆட்சி காலத்தில் ஆட்சியாளர்களை குட்கா வழக்கில் இருக்கிறார்கள். அவர்கள் பேசுவது சரியில்லை.

ஆட்சிக்கு வந்தவுடன் போதைப் பொருள் வழக்குகளில் தொடர்புடையவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து கடுமையான நடவடிக்கை எடுத்த ஒரே அரசு ஸ்டாலின் அரசு. ஆத்தூரில் எத்தனை நபர்கள் போதைப்பொருள் விற்றார்கள் எனத் தெரியும். தற்போது அனைவரும் அந்த தொழிலை விட்டுவிட்டு சென்றுவிட்டனர். எள்முனை அளவு நடவடிக்கையும் எடுக்க திமுக அரசு தயங்கியது இல்லை. 200 சதவீதம் நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்து வருகிறார்.

சிபிஎம் கே. பாலகிருஷ்ணன் வைத்த குற்றச்சாட்டு குறித்து எனக்கு தெரியாது. தமிழக காவல்துறை தலைவர் மட்டுமல்லாமல் அமைச்சர்கள், முதலமைச்சர்களை எளிதாக சந்திக்கலாம். கட்சி ரீதியாக இல்லை, தனி மனிதர்களும் எளிதாக சந்திக்கலாம்.100க்கு 99 சதவீதம் நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசு ஸ்டாலின் அரசு. எதையும் மறைக்கக்கூடாது. சின்ன தவறு மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எதனையும் கண்டும், காணாமல் இருக்கும் அரசு இந்த அரசு இல்லை. அரசு மீது சிறிய கரும்புள்ளி கூட விழக் கூடாது என்பதில் கவனமாக செயல்படக்கூடிய முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார்” எனக் கூறினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow