பல இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர் ஆம்ஸ்ட்ராங் - எல்.முருகன் புகழாரம்

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் சமூக சேவையில் ஈடுபட்டு பல இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர் என்றும் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Jul 6, 2024 - 23:33
Jul 6, 2024 - 23:46
 0
பல இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர் ஆம்ஸ்ட்ராங் - எல்.முருகன் புகழாரம்
L Murugan Condoles BSP Armstrong Death

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று வெள்ளிக்கிழமை [05-07-24] இரவு அவரது வீட்டருகே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.‌

இதற்கிடையே இக்கொலை வழக்கில் தொடர்புடைய 8 பேர் அண்ணா நகர் துணை ஆணையர் முன்பு சரணடைந்ததாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து போலீஸார் கைதான பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலா, அவரது கூட்டாளிகள் ராமு, திருவேங்கடம், திருமலை, மணிவண்ணன், செல்வராஜ், சந்தோஷ், அருள் ஆகிய 8 பேரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் பிரேத பரிசோதனை முடிந்து உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிமனையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு அவரது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் அதனை ஏற்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸார் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஆம்ஸ்ட்ராங் வீடு, அலுவலகம் மற்றும் பெரம்பூர் சுற்று வட்டாரம் முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பெரம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்துப் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் சமூக சேவையில் ஈடுபட்டு பல இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியுள்ளார். அவர், சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத் தலைவருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது.

இவருடைய படுகொலை என்பது அரசாங்கத்தின் தோல்வியை காட்டுகிறது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. சட்டங்களை கையில் வைத்துள்ள முதலமைச்சர் இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு முன்பு அதிமுக நிர்வாகி ஓட, ஓட வெட்டப்பட்டார்.

இதுபோன்று படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் சென்னையில்தான் நடந்து வருகிறது. இந்த கொலைக்கு தமிழக முதலமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசிற்கு சட்ட ஒழுங்கை ஒருதுளி கூட மதிக்கவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை‌ சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்துகிறது” என்று அவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow