அதிமுக ஆட்சியில் 1675 கொலைகள்... எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி!
தமிழ்நாட்டில் நடைபெறும் தனிப்பட்ட கொலைகளை எல்லாம் சட்ட ஒழுங்குடன் இணைத்து பேசுவது சரியல்ல என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (நவ. 21) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். அதில், “கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் நடந்த ஊழல் தொடர்பாக திமுக சிபிஐ விசாரணை கேட்டது. எடப்பாடி பழனிச்சாமி மனசாட்சியை அடகு வைத்து விட்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியில் 570 கோடி ரூபாய் கண்டெய்னர் லாரியில் கட்டு கட்டாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்து சிபிஐ இதுவரை என்ன விசாரணை செய்தது? கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தகுந்த முறையில் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி யோகியரை போல கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மேல் முறையீடு கூடாது எனக் கூறுகிறார். அதிமுக ஆட்சியிலும் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டார்கள். சட்டம் ஒழுங்கு என்ன என்பதை எடப்பாடி பழனிச்சாமி அறிந்து கொள்ள வேண்டும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேரை எடப்பாடி சுட்டுக் கொன்றார். அம்மா அம்மா என்று மூச்சுக்கு 300 தடவை கூறும் அவர்கள் கடைசி காலத்தில் அம்மா வாழ்ந்தது கொடநாட்டில் மட்டும்தான். கொடநாட்டில் இருந்து கோட்டையை இயக்கியவர்தான் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் நடைபெறும் தனிப்பட்ட கொலைகளை எல்லாம் சட்டம் ஒழுங்குடன் இணைத்து பேசுவது சரியல்ல. திமுக ஆட்சியில் கொலைகள் குறைந்துள்ளது. அதிமுக ஆட்சியில் ஒரு லட்சம் கொலைகள் நடந்துள்ளது. இதை நான் ஆதாரத்தோடு கூறுகிறேன். 2020 இல் அதிமுக ஆட்சியில் 1675 கொலைகள் நடந்துள்ளது. ஆனால் இந்த ஆட்சியில் 799 கொலைகள்தான் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் 71% மக்கள் முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த கொலைகளுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். இந்த சம்பவங்கள் தவிர்க்க முடியாத ஒன்று. அதிமுக ஆட்சியில் நுங்கம்பாக்கத்தில் பட்ட பகலில் நடந்த சுவாதியின் கொலை என்ன ஆச்சு? அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் என்ன ஆச்சு? கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியை, எஸ்.பி ஆகியோர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்” எனக் கூறினார்.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்த 66 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விவகாரம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கள்ளச்சாராய மரண வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (நவ. 20) சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த உத்தரவை வரவேற்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கள்ளச்சாராய மரணங்கள் குறித்து மடியில் கனமில்லை என்றால் திமுக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யக் கூடாது. சிபிஐ விசாரணை மூலம் உயிரிழந்த 67 பேருக்கு நீதி கிடைக்கட்டும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இதற்கு தற்போது பதிலளித்துள்ளார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
What's Your Reaction?