அம்பானி இல்ல திருமண விழாவில் டி20 உலகக்கோப்பை சாம்பியன்களுக்கு கெளரவம்... வாழ்த்து மழை பொழிந்த பிரபலங்கள்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மனைவி சாக்ஷியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது தவிர டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மும்பை: டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி 2வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. கபில்தேவ், தோனிக்கு பிறகு இந்திய அணிக்கு ஐசிசி உலகக்கோப்பையை வென்ற வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
இந்திய அணியின் சாதனை வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக, விளையாட்டு பிரபலங்களும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் பார்படாஸில் இருந்து உலகக்கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்கள். இதனைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் வெற்றிக் கோப்பையுடன் பேருந்தில் ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணியில் பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், அம்பானி இல்ல திருமண விழாவிலும் இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்க்கும் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முந்தைய 'சங்கீத்' எனும் நிகழ்ச்சி, மும்பையில் கோலாகலமாக நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் சினிமா பிரபலங்கள், விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். பாலிவுட் நடிகர் சல்மான் கான், வருண் தவான், தமிழ்நாட்டை சேர்ந்த இயக்குநர் அட்லி, நடிகைகள் வித்யா பாலன், மாதுரி தீக்ஷித், ஆலியாபட் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மனைவி சாக்ஷியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது தவிர டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு வந்தவர்களை முகேஷ் அம்பானி-நீடா அம்பானி ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தபோது, அங்கு இருந்த பிரபலங்கள் எழுந்து நின்று அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல் முகேஷ் அம்பானி-நீடா அம்பானி ஆகியோர், விழா மேடையில் வைத்து ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யாவுக்கு தனித்தனியாக வாழ்த்து அவர்களை கெளரவப்படுத்தினார்கள். ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மா கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவர் மும்பை அணி நிர்வாகம் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் மும்பை அணியில் இருந்து விலக உள்ளதாகவும் தகவல் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?