எஸ்.பி. வேலுமணி இல்ல திருமண விழாவில் சங்கமித்த பாஜக தலைவர்கள்.. மீண்டும் கூட்டணி கணக்கு?
அதிமுக தலைவர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத் திருமண விழாவில் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.

அதிமுகவின் தலைமை நிலைய செயலாளரும் முன்னணி தலைவர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய் விகாசுக்கு கோவை ஈச்சனாரி பகுதியில் அமைந்து உள்ள செல்வம் மஹாலில் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் மற்றும் பல்வேறு கட்சி அரசியல் பிரமுகர்கள் நேரில் கலந்து கொண்டனர்.
கட்சி பாகுபாடு பாராமல் அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், நடிகர் நடிகைகள் என பல்வேறு தரப்பினரும் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். குறிப்பாக பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், குஷ்பூ மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரும் எஸ்.பி வேலுமணியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு உள்ளது பேசுப்பொருளாகி உள்ளது.
சமீபத்தில் எஸ்.பி வேலுமணி பாஜக மூத்த தலைவரை நேரில் சந்தித்து பேசியதன் மூலம் மகனின் திருமண விழாவில் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டு இருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விகளும் தற்போது வலுப்பெற்றுள்ளது. எஸ்.பி. வேலுமணியின் இல்லத் திருமண விழா தற்போது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
வருகிற 2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக, பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக பல தரப்பில் இருந்தும் கருத்துகள் எழுந்தது.
மேலும் படிக்க: பேரனால் சிவாஜி கணேசன் வீட்டிற்கு வந்த ஆபத்து.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
இதையடுத்து, பாஜகவுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் எந்த கூட்டணியும் வைக்க மாட்டோம் என்று அதிமுக தலைவர்கள் வெளிப்படையாக அறிவித்திருந்தனர். இந்த சூழ்நிலையில் தற்போது அதிமுக தலைவர் எஸ்.பி.வேலு மணி இல்லத் திருமண விழாவிற்கு பாஜக தலைவர்கள் படையெடுத்து சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.
What's Your Reaction?






