சினிமா

'பைரதி ரணகல்’ படக்குழு முக்கிய அறிவிப்பு.. குஷியில் தமிழ்-மலையாள ரசிகர்கள்

கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான ‘பைரதி ரணகல்' திரைப்படம் SUN NXT ஓடிடி தளத்தில் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் ஸ்ட்ரீமாகி வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.

'பைரதி ரணகல்’ படக்குழு முக்கிய அறிவிப்பு.. குஷியில் தமிழ்-மலையாள ரசிகர்கள்
‘பைரதி ரணகல்' முக்கிய அறிவிப்பு

இயக்குநர் நாரதன் இயக்கத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பைரதி ரணகல்'. இப்படத்தில், ராகுல் போஸ், ருக்மணி வசந்த், அவினாஷ், சாயா சிங், தேவராஜ், ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். நவீன் குமார் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக ஆகாஷ் ஹிரேமத் பணியாற்றியுள்ளார். 

கீதா பிக்சர்ஸ் சார்பில்  தயாரிப்பாளர் கீதா சிவராஜ்குமார் தயாரித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றது. 'மஃப்டி’ படத்தின் ப்ரீக்குவலாக உருவான படம் தான்  'பைரதி ரணகல்'.  'மஃப்டி' படத்தில் பைரதி ரணகல் எனும் டான் கதாப்பத்திரத்தில் கன்னட நடிகர் சிவாராஜ்குமார்  நடித்திருந்தார்.

இந்தக் கதாப்பத்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து அந்த கதாப்பாத்திரத்தின் முன் கதையை மையமாக வைத்து 'பைரதி ரணகல்' திரைப்படம் உருவானது. ஒரு சாதாரண வழக்கறிஞராக இருந்த பைரதி ரணகல், எப்படி நாடே திரும்பிப் பார்க்கும் டானாக மாறுகிறான் என்பது தான் இப்படத்தின் கதை.

அதிரடி ஆக்சன் படமாக,  கமர்ஷியல் அம்சங்களுடன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாரட்டுக்களைக் குவித்தது. இப்படம் கன்னட மொழியில், திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, ஓடிடி வெளியீட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில், ‘பைரதி ரணகல்' திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் ரசிக்கும் வகையில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் SUN NXT ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.