Womens T20 World Cup: டி20 உலகக் கோப்பை... ஆஸ்திரேலியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த இந்திய அணி!
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான போட்டியில், இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியா அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

ஷார்ஜா: மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் முக்கியமான லீக் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இப்போட்டியில் வெற்றிப் பெற்றால் அரையிறுதிக்குச் சென்றுவிடலாம் என்ற நிலையில் இருந்த இந்திய அணி, தற்போது மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது. ஷார்ஜாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸில் வென்ற ஆஸி அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் கிரேஸ் ஹாரிஸ், பெத் மூனி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
பெத் மூனி இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், 2.4 ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜார்ஜியா வேர்ஹாம், அடுத்த பந்தில் டக் அவுட் ஆனார். இவர்கள் இருவரது விக்கெட்டுகளையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி மெர்சல் காட்டினார் ரேணுகா சிங். ஆனாலும், ஆஸ்திரேலிய அணியில் ஓபனராக களமிறங்கிய கிரேஸ் ஹாரிஸ் 40 ரன்களும், கேப்டன் தஹ்லியா மெக்ராத், எல்லிஸ் பெர்ரி ஆகியோர் தலா 32 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் எடுத்தாலும், ஆஸி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில், ரேணுகா சிங், தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது பேட்டிங்கை தொடங்கியது இந்திய மகளிர் அணி. அதன்படி இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். இவர்களில் ஸ்மிருதி மந்தனா 6 ரன்களில் ஆட்டமிழக்க, ஷஃபாலி வர்மா 20 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 16 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். 47 ரன்களுக்குள் 3 முக்கியமான விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, இலக்கை விரட்ட முடியாமல் திணறியது. ஆனால், ஹர்மன்ப்ரீத் கவுர், தீப்தி ஷர்மா இருவரும் ஓரளவு நம்பிக்கை கொடுத்தனர்.
ஹர்மன்ப்ரீத் கவுர் 54 ரன்கள் எடுத்து இறுதி வரை இந்திய அணியின் வெற்றிக்காக போராடினார். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், இந்திய அணியால் 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஆஸி அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப் பெற்றது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் அன்னாபெல் சதர்லேண்ட், சோஃபி மோலினக்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் ஆஸி அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.
இப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, அரையிறுதிக்கு தகுதிப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
What's Your Reaction?






