IPL 2025: ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்கள் யார்..? மீதமிருக்கும் தொகை எவ்வளவு..? முழு விவரம் இதோ..!
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 577 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 367 இந்திய வீரர்களும், 210 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
உலக கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுவதிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்தும் முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்பதால், ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது.
ஐபிஎல் நிர்வாகம் ஒவ்வொரு அணியும் ஆறு வீரர்களை தக்க வைக்கலாம் என்று கூறிய நிலையில், மொத்தமுள்ள 10 அணிகளும் தங்களுக்கான சிறந்த வீரர்களைத் தக்கவைத்துள்ளனர். ஐபிஎல் அணிகள் தங்களிடம் இருந்த தொகையை எவ்வளவு செலவு செய்துள்ளனர். மீதமிருக்கும் தொகை எவ்வளவு என்பது குறித்து காணலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)
சென்னை அணி இதுவரை, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மகேந்திரசிங் தோனி ஆகிய இந்திய வீரர்களையும், வெளிநாட்டு வீரரான மதீஷா பத்திரனாவையும் தக்கவைத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் இருந்த ரூ.120 கோடியில், இதுவரை ரூ.65 கோடிக்கு வீரர்களை தக்கவைத்த நிலையில், தற்போது ரூ.55 கோடி மட்டுமே உள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC)
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, அக்சர் படேல்,குல்தீப் யாதவ், அபிஷேக் போரல் ஆகிய இந்திய வீரர்களுடன், வெளிநாட்டு வீரரான ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
டெல்லி அணியிடம் இருந்த ரூ.120 கோடியில், இதுவரை ரூ.47 கோடிக்கு வீரர்களை தக்கவைத்த நிலையில், தற்போது ரூ.73 கோடி மட்டுமே உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் (GT)
சுப்மன் கில், சாய் சுதர்ஷன், ராகுல் திவேட்டியா, ஷாருக்கான் ஆகிய இந்திய வீரர்களுடன், வெளிநாட்டு வீரரான ரஷித் கான் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
டெல்லி அணியிடம் இருந்த ரூ.120 கோடியில், இதுவரை ரூ.51 கோடிக்கு வீரர்களை தக்கவைத்த நிலையில், தற்போது ரூ.69 கோடி மட்டுமே உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR):
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரிங்கு சிங், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங் ஆகிய இந்திய வீரர்களுடன், வெளிநாட்டு வீரர்களான ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன் இருவரையும் தக்கவைத்துள்ளது.
கே.கே.ஆர் அணியிடம் இருந்த ரூ.120 கோடியில், இதுவரை ரூ.69 கோடிக்கு வீரர்களை தக்கவைத்த நிலையில், தற்போது ரூ.51 கோடி மட்டுமே மீதம் உள்ளது.
லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் (LSG):
லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியில், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மோக்ஷின் கான், ஆயுஸ் பதோனி ஆகிய இந்திய வீரர்களுடன், வெளிநாட்டு வீரரான நிகோலஸ் பூரன் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
லக்னோ அணியிடம் இருந்த ரூ.120 கோடியில், இதுவரை ரூ.51 கோடிக்கு வீரர்களை தக்கவைத்த நிலையில், தற்போது ரூ.69 கோடி மட்டுமே உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் (MI):
மும்பை இந்தியன்ஸ் அணி ஜஸ்ப்ரீத் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட இந்திய வீரர்களை மட்டுமே தக்கவைத்துள்ளது. மும்பை அணி எந்த வெளிநாட்டு வீரரையும் தக்கவைக்கவில்லை என்பது குறிப்படத்தக்கது.
மும்பை அணியிடம் இருந்த ரூ.120 கோடியில், இதுவரை ரூ.75 கோடிக்கு வீரர்களை தக்கவைத்த நிலையில், தற்போது ரூ.45 கோடி மட்டுமே உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் (PBKS)
பஞ்சாப் அணியை பொறுத்தவரை ஷாஷாங் சிங், பிரப்சிம்ரன் சிங் ஆகிய இரண்டு வீரர்களை மட்டுமே தக்க வைத்துள்ளது. பஞ்சாப் அணியும் எந்த வெளிநாட்டு வீரரையும் தக்கவைக்கவில்லை
பஞ்சாப் அணியிடம் இருந்த ரூ.120 கோடியில், இதுவரை ரூ.9,5 கோடிக்கு இரண்டு வீரர்களை தக்கவைத்த நிலையில், தற்போது மொத்தமுள்ள 10 அணிகளில் பஞ்சாப் அணியிடம் மட்டுமே அதிகபட்சமாக ரூ.110.5 கோடி மட்டுமே உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR):
ஆர். ஆர். அணி சஞ்சு சாம்சன், யசஸ்வி ஜெய்ஷ்வால், ரியான் பராக், துரூவ் ஜூரல், சந்தீப் சர்மா உள்ளிட்ட ஐந்து இந்திய வீரர்களையும், வெளிநாட்டு வீரரான ஷின்ரோன் ஹெட்மையரையும் தக்கவைத்துள்ளது.
ராஜஸ்தான் அணியிடம் இருந்த ரூ.120 கோடியில், இதுவரை ரூ.79 கோடிக்கு வீரர்களை தக்கவைத்த நிலையில், தற்போது ரூ.41 கோடி மட்டுமே மீதம் உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, விராட் கோலி, ராஜத் படிதர் , யஷ் தயாள் மூன்று இந்திய வீரர்களை மட்டுமே தக்கவைத்துள்ளது. கேப்டனாக இருந்த ஃபாஃப் டு பிளெசிஸ் உள்ளிட்ட எந்த வெளிநாட்டு வீரரையும் தக்கவைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடம் இருந்த ரூ.120 கோடியில், இதுவரை ரூ.37 கோடிக்கு வீரர்களை தக்கவைத்த நிலையில், தற்போது ரூ.83 கோடி மட்டுமே மீதம் உள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)
அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி உள்ளிட்ட இரண்டு இந்திய வீரர்களையும், ஹென்ரிச் கிளாசன், பாட் கம்மின்ஸ், ட்ராவிஸ் ஹெட் உள்ளிட்ட மூன்று வெளிநாட்டு வீரர்களையும் தக்கவைத்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் இருந்த ரூ.120 கோடியில், இதுவரை ரூ.75 கோடிக்கு வீரர்களை தக்கவைத்த நிலையில், தற்போது ரூ.45 கோடி மட்டுமே மீதம் உள்ளது.
ஐபிஎல் அணிகளின் வியூகம்:
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் 10 அணிகளில் அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் ரூ.110.5 கோடியும், குறைந்தபட்சமாக ராஜஸ்தான் அணியிடம் ரூ.41 கோடியும் உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய நான்கு அணிகளுக்கும் கேப்டன் இல்லாத சூழல் நிலையில், தஙகளிடம் மீதமிருக்கும் தொகையை வைத்து யாரை வாங்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால், இந்திய வீரர்களில் உள்ள முக்கிய வீரர்களான ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் மற்றும் வெளிநாட்டு வீரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் மிட்செல் ஸ்டார்க் போன்ற நட்சத்திர வீரர்களும் ஏலத்தில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?