“அதிமுகவில் நீக்கப்பட்டவர்கள்... நீக்கப்பட்டதுதான்... உதயநிதி பதிலில் முதிர்ச்சியில்லை” EPS ஆவேசம்!
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை நீக்கும் நடைமுறை ஜெயலலிதா காலம் முதலே இருப்பது தான் என்றும், ஒரு சிலரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதால் அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் 53 ஆம் ஆண்டு தொடக்க விழாவை அக்கட்சியினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில், மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலையிட்டு மரியாதை செலுத்தினார். கட்சிக் கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றிய அவர், தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் அதிமுகவின் முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக தொடங்கப்பட்டது தான் இந்தியளவில் தமிழகம் வளர்ச்சிப் பெற காரணமாக அமைந்தது. அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையே தவறு, கட்சியில் இருந்து சிலர் நீக்கப்பட்டனர் அவ்வளவு தான். மேலும், அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் நீக்கப்படுவது ஜெயலலிதா காலத்திலேயே இருந்த நடைமுறைதான். அதிமுக இணைப்பு குறித்து 6 முன்னாள் அமைச்சர்கள் என்னிடம் பேசுவதாக கூறுவது பச்சைப் பொய். கட்சி விரோத நடடிக்கையால் நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டதுதான் என்றார்.
முதலமைச்சரின் தொகுதியில் உள்ள கொளத்தூர் காவல்நிலையத்தில் தண்ணீர் தேங்கியதால், காவலர்கள் காவல்நிலையம் சென்று பணிசெய்ய முடியவில்லை. கிழக்கு கடற்கரை சாலையில் திமுகவிற்கு நெருக்கமானவர்கள் வாங்கி குவித்துள்ள நிலங்களின் மதிப்பு கூட வேண்டும். இதற்காக தான் முட்டுக்காட்டில் கருணாநிதி பெயரில் பன்னாட்டு மையத்தை அமைக்கின்றனர். அரசு பணத்தை வீணடிக்கின்றனர். கலைஞர் பன்னாட்டு மையம் அமைப்பதற்கு தேவையான நிலம் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்திலேயே 16 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது.
நகரத்துக்கு வெளியே 40கி.மீ தூரத்தில் அமைத்தால்தான் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார்,, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தல் சென்னை உட்பட பல மாவட்டங்களில் அதிகன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியது. சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுத்திருந்தனர். இன்றும் கூட அதிகன மழை பெய்யும் என்றனர், ஆனால் வெயில்தான் பிரகாசமாக அடிக்கிறது. குறைந்த மழைப்பொழிவிலும் சென்னையில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி தத்தளித்தது. மக்கள் பாதிக்கப்படவில்லை என முதல்வர் துணை பொய்யான தகவலை கூறியதாக குற்றம்சாட்டினார்.
மேலும், 20 செ.மீ மழை பெய்தாலும், ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது என முதலமைச்சரும் அமைச்சர்களும் கூறியிருந்தனர், ஆனால் இன்று உண்மைநிலை வெளிவந்துவிட்டது என்றார். அதிமுக ஆட்சியில் உலக வங்கி, ஜெர்மன் வங்கி போன்றவற்றிடம் நிதி பெற்று சென்னையில் 2400 கி.மீ தூரத்திற்கு மழை நீர் வடிகால் பணி தொடங்கியது. ஆட்சி முடிவுறும்போது 1240 கி.மீ நீளத்திற்கு கால்வாய் பணிகளை நிறைவு செய்தோம். எஞ்சிய பணிகளை இந்த ஆட்சியில் நிறைவு செய்யவில்லை. நாங்கள் மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணியை உடனடியாக நிறைவேற்றி இருந்தால் இன்று மழை வெள்ளம் தேங்கி இருக்காது.
அதேபோல், கூவம், அடையாறில் கரையோரம் இருந்த 17,000க்கும் மேற்பட்டோரை புதிய கட்டடம் கட்டி வேறு இடங்களுக்கு குடியேற்றினோம். 40 கி.மீ நீளம் கொண்ட 30 நீர் நிலைகளை எங்கள் ஆட்சியில் தொடர்ந்து தூர் வாரினோம். ஆனால் திமுக அரசு நீர்நிலைகளை முறையாக தூர் வாரவில்லை. ஸ்டாலின் தலைமையிலான அரசு வெள்ள நீர் தேங்காமல் இருப்பதற்கான பரிந்துரைகளை வழங்க திருப்புகழ் கமிட்டியை அமைத்தனர். திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரைகள் குறித்தும், அவை நிறைவேற்றப்பட்டனவா என்பது பற்றியும் அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை.
தற்போது பெய்த மழையில் சென்னையில் வெள்ளநீர் தேங்காததே நாங்கள் வெள்ளை அறிக்கை கேட்டதற்கான பதில் என துணை முதலமைச்சர் உதயநிதி கூறியது அவரது முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது, விளையாட்டுத்தனமாக பேசுகிறார். மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதாலேயே வெள்ளை அறிக்கை கேட்கிறோம். கனமழை தொடர்ந்து பெய்திருந்தால் யாரும் வெளியில் சென்றிருக்க முடியாது. கனமழை இல்லாததால் சென்னையில் வெள்ளநீர் வடிந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் இருந்தது போல் தற்போதைய அமைச்சர்களிடம் பணிகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை. அனைத்து அமைச்சர்களின் பணிகளையும் துணை முதலமைச்சரே செய்வதாக விமர்சித்தார்.
மாநகரம், மின்சாரம், சுகாதாரம், வருவாய், பொதுப்பணி, நீர்வளம் என அனைத்து துறைகளின் பணியையும் உதயநிதியே செய்கிறார். மூத்த அமைச்சர்கள் இருக்கும்போது ஸ்டாலின் குடும்பத்தில் இருந்து வந்த உதயநிதியை மட்டும் முன்னிலைப்படுத்துவது ஏன்..? மற்ற அமைச்சர்களை முன்னிலைப்படுத்தி இருந்தால் வெள்ள நிவாரண பணிகள் விரைவாக முடிந்திருக்கும். திமுவினர் 98 சதவீத வடிகால் பணி நிறைவடைந்ததாக கூறினர். மழைநீர் வடிகால் பணி நிறைவடையாதது குறித்து கேட்டால் இன்றும் சாக்குபோக்குதான் கூறுகின்றனர்.
இன்னும் 15, 16 மாதங்கள் தான் திமுக ஆட்சி இருக்கிறது. எப்படி புதிய பணிகளை நிறைவேற்றுவார்கள். அடையாறு, கோவளம், கொசஸ்தலை ஆறு வடிகால் திட்டங்களை நாங்கள் செயல்படுத்தினோம். 5 ஆண்டு சென்னை மேயராக இருந்து ஸ்டாலின் செய்தது என்ன..? உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும் மழைநீர் வடிகால் பணிகளை ஸ்டாலின் மேற்கொள்ளவில்லை. திருப்புகழ் கமிட்டியின் அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அமைச்சர் சேகர்பாபு டீதான் வாங்கி கொடுத்து கொண்டிருக்கிறார். தூய்மைப் பணியாளர்களுக்கு டீ வாங்கி கொடுத்துவிட்டு முதலமைச்சரை அனுப்பி வைக்கும் வேலையை எல்லாம் அதிமுக ஆட்சியில் நாங்கள் செய்ததில்லை. ஒக்கி, வர்தா, கஜா என பல புயல்களின்போது புயல்போல் பணியாற்றினோம் நாங்கள். பலரின் வயிற்றில் அடித்த அரசு தான் திமுக, வெறும் டீ வங்கி கொடுப்பதால் மக்களுக்கு பயனில்லை என்றார்.
What's Your Reaction?