IND vs NZ 1st Test Match 2024 Highlights : இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, டாம் லாதம் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. மேலும், 2ஆவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரையிலும், 3ஆவது டெஸ்ட் போட்டி நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 05ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
முன்னதாக, வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும் முழுமையாக கைப்பற்றியது. அதே உற்சாகத்தோடும், வெற்றி மனப்பாண்மையிலும் இந்திய அணி களமிறங்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.
ஆனால், கர்நாடகாவில் தற்போது தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. பெங்களூரு நகரில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. கடந்த மூன்று நாட்களாக மழை பெய்ய ஆரம்பித்த நிலையில், நேற்று மாலை வரை பெங்களூரில் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வந்தது.
இதனால் கர்நாடகா மாநிலத்தின் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்தது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள், விமான நிலைய சர்வீஸ் சாலை, சுரங்கப் பாதைகள் மற்றும் பிரதான சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் மழை நீர் சூழ்ந்தது. இதனையடுத்து டாஸ் கூட போடாமல் முதல்நாள் போட்டி முழுமையாக தடைபட்டதை அடுத்து, பிற்பகல் 2.30 மணியளவில் நேற்றைய முதல்நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று, ஆட்டம் தொடங்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை, நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.
ரோஹித் சர்மா 15 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், வெறும் 2 ரன்களை மட்டுமே எடுத்தார். இதனால், பொறுமையிழந்து ரோஹித் அடித்து ஆட நினைத்து டிம் சௌதி பந்தில் போல்டாகி வெளியாகினார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி, வில்லியம் ஓ ரார்க் [William O’Rourke] பந்தில் கிளென் பிலிப்ஸிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார்.
அடுத்ததாக களமிறங்கிய சர்ஃப்ராஸ் கான், மேட் ஹென்றி வீசிய பந்தை ஆஃப் திசையில் அடிக்க, அதனை டெவன் கான்வே அற்புதமாக கேட்ச் பிடித்தார். சர்ஃப்ராஸ் கானும் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால், இந்திய அணி 10 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது
அதனையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ஆனாலும் அவர்களால், நியூசிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள திணறினர். நியூசிலாந்து வீரர்கள் சரியான லெந்தில், முறையான ரிதத்தில் பந்தை எகிற வைத்தனர். இதனால், இந்திய வீரர்கள் அடி மேல் அடி வாங்கினர்.
பின்னர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 63 பந்துகளில் 13 ரன்கள் எடுத்த நிலையில், வில்லியம் ஓ ரார்க் பந்தில் வெளியேறினார். அப்போது இந்திய அணி 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால், அடுத்த 15 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளையும் இழந்தது.
கே.எல்.ராகுல் 6 பந்துகளை சந்தித்து வில்லியம் ஓ ரார்க் பந்துவீச்சில் டக்-அவுட் ஆனார். அதேபோல், ரவீந்திர ஜடேஜா மேட் ஹென்றி பந்துவீச்சில் டக்-அவுட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஹென்றி பந்தில் எட்ஜ் வாங்கி அஜாஸ் படேலிடம் கேட்ச் கொடுத்து டக்-அவுட் ஆனார்.
சிறிது நேரம் நிலைத்து ஆடிய ரிஷப் பண்ட் 49 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து மேட் ஹென்றி பந்தில் வெளியேறினார். ஜஸ்பிரிட் பும்ரா, உயரே அடித்த பந்தை அற்புதமாக பிடித்தார் மேட் ஹென்றி. அடுத்து குல்தீப் யாதவ் 17 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து மேட் ஹென்றி பந்தில் வெளியேறினார்.
இதனால், இந்திய அணி 46 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரார்க் 4 விக்கெட்டுகளையும், டிம் சௌதி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில், மோசமான பல சாதனைகளை படைத்துள்ளது.
- 46 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததன் மூலம், இந்திய அணி தனது சொந்த மண்ணில் குறைவான ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன்னதாக 1987ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 75 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியிருந்தது.
- மேலும், ஒட்டுமொத்தமாக 3ஆவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. 2020ஆம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 36 ரன்களும் [21.2 ஓவர்கள்], 1974ஆம் ஆண்டும் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 42 ரன்களும் [17 ஓவர்கள்] எடுத்திருந்தது. அதே சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசிய அணியால் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் என்ற மோசமான சாதனையை படைத்தது இந்திய அணி.
- முன்னதாக, பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு [1986ஆம் ஆண்டு] எதிராகுவும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் [2002ஆம் ஆண்டு] 53 ரன்களை எடுத்துள்ளது. அதேபோல், நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னதாக, ஜிம்பாப்வே அணி 2012ஆம் ஆண்டு 51 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியிருந்தது.
- ஒட்டுமொத்தத்தில் முதல் இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட 4ஆவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர், தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 36 ரன்களும், நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 42 ரன்களும், நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 45 ரன்களும் எடுத்துள்ளது.
- இந்த போட்டியில், விராட் கோலி, சர்ஃப்ராஸ் கான், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய 5 வீரர்கள் டக்-அவுட் முறையில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரு மோசாமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. அதாவது, முதல் 8 பேட்ஸ்மேன்களில் 5 பேர் டக்-அவுட் ஆவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னதாக 1888ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா வீரர்கள் 5 பேர் டக்-அவுட் ஆகியுள்ளனர்.
- 1988ஆம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தனது சொந்த மண்ணில் 7 முறை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. அதில், 5 முறை நியூசிலாந்து அணியே 10 விக்கெட்டுகளை முழுமையாக கைப்பற்றியுள்ளது. ஒருமுறை தென் ஆப்பிரிக்கா அணியும், ஒருமுறை வெஸ்ட் இண்டீஸ் அணியும் இந்த சாதனையை படைத்துள்ளது.
- இந்த இன்னிங்ஸில் இந்தியா தரப்பில் வெறும் 4 பவுண்டரிகள் மட்டுமே [ஜெய்ஸ்வால் -1, ரிஷப் பண்ட் -2, மொஹமது சிராஜ் -1] அடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.