ரூ.1,20,000 வாடகையில் பங்களா.. 16 லட்சம் வீண் செலவு.. துணைவேந்தர் மீது சரமாரி புகார்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் அரசு பணத்தை வீண் விரயம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல்கலைக்கழகம் அனுமதித்ததோ மாத வாடகை 75 ஆயிரம் ரூபாய் அனுமதித்துள்ள நிலையில், இசிஆர் சாலையில் கடற்கரையை ஒட்டி சொகுசு பங்களாவில் குடியிருந்து வருகிறார் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம்.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் மீது நாளுக்கு நாள் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. பல்கலைக்கழக சட்டம், துணை வேந்தருக்கு வீட்டு வாடகையாக மாதம் 75 ஆயிரம் ரூபாய் அனுமதித்துள்ள நிலையில், இவர் கிழக்கு கடற்கரை சாலையில் கடலையொட்டி உள்ள மிகப்பெரும் பங்களாவில் ரூ. 1,20,000 ஆயிரம் வாடகை கொடுத்து வசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசு பணத்தை கண்டபடி விரயம் செய்து வரும் துணைவேந்தரின் செயல்பாடுகள் குறித்து, தொடர் விசாரணை தேவை என்றும், அரசுக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் புகார் அனுப்பியுள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டையில் இயங்கி வரும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்து வருபவர் ஆறுமுகம். இவர் பதவியேற்றதிலிருந்து பல்கலைக்கழக நிதியை பல வகையில் வீண் விரயம் செய்தி செய்வதாகவும், நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் எழுத்துபூர்வமாக தமிழக அரசுக்கு புகார் அளிக்க அனுப்பி உள்ளனர்.
தலா மூன்று லட்சம் ரூபாய் செலவில், ஆறு ஸ்மார்ட கிளாஸ் ரூம் போர்டுகளை வாங்கி, அவை பயன்படுத்தப்படாமல் தூசி படிந்து இருக்கின்றன என்றும், நாக் குழு வருகையை காரணம் காட்டி சென்னை மற்றும் விழுப்புரம் மண்டல வளாகத்தில் தேவையற்ற வசதிகளை ஏற்படுத்தி 16 லட்சம் ரூபாய் வீண செலவு செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
பல்கலைக்கழகத்தினுடைய சட்டம் துணை வேந்தர் வீட்டு வாடகையாக 75 ஆயிரம் ரூபாய் செலவு செய்யலாம் என்று அனுமதிக்கிறது எனவும் ஆனால் துணைவேந்தர், சைதாப்பேட்டையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை பகுதியில் கடற்கரையை ஒட்டி உள்ள பங்களாவில் மாதம் ரூ. 1,20,000 ஆயிரம் செலவில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார் என்ற குற்றச்சாட்டையும் கூறியுள்ளனர்.
பொதுவாக துணைவேந்தர் இல்லம் என்பது பல்கலைக்கழக வளாகத்திலேயோ அல்லது அருகிலேயோ இருக்கும். சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் இல்லமானது, கிண்டி வளாகத்தில் இருக்கிறது. இது அரசு பங்களாவாகும். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் அரசு பங்களா, பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே இருக்கிறது. பல துணைவேந்தர்களும் அரசு ஒதுக்கீடு செய்துள்ள சொகுசு பங்களாவில் தான் குடியிருந்து வருகின்றனர்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தருக்கான சகல வசதிகளும் நிறைந்த விடுதி, வளாகத்திலேயே இருந்த போதும், அதனை அவர் பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆனால், துணைவேந்தர் ஆறுமுகம், பே வாட்ச் முதல் தெருவில் 8ஆம் எண் கொண்ட பங்களா 3 தளங்களை கொண்டதாக இருக்கிறது. இந்த பங்களாவில் துணைவேந்தரும், அவரின் மனைவியும் மட்டுமே வசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இப்படி தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுந்து வரும் நிலையில் கூட, அவர் எந்த விளக்கமும் தராமல் அமைதி காத்து வருகிறார். துணைவேந்தரின் நிதி நிர்வாக செயல்பாடுகள் குறித்து முழுமையான விசாரணையை உயர்கல்வித்துறை நடத்த வேண்டும் என்பது பல்கலைக்கழக பேராசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.
What's Your Reaction?






