வீடியோ ஸ்டோரி

முற்றும் திமுக - கம்யூ., மோதல்

மதுரையில் இன்று நடைபெற்ற மாற்று திறனாளிகளுக்கான பேருந்து துவக்க விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசனும் அக்கட்சியின் மாநகராட்சி துணை மேயர் நாகராஜனும் கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முற்றும் திமுக - கம்யூ., மோதல்

மதுரை, கோவை மாவட்டங்களில் பொதுவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சற்று வலுவாக இருக்கும். அவ்வகையில் பி.ராமமூர்த்தி, பி.ஜானகியம்மாள் காலம்தொட்டு எந்த கூட்டணியிலிருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரையை கேட்டுப் பெறுவது வாடிக்கையான ஒன்று. 2 முறை அக்கட்சி சார்பில் பி.மோகன் எம்.பியாக இருந்த நிலையில் 2019 மற்றும் 2024-ல் சு.வெங்கடேசன் எம்.பியாக வெற்றி பெற்றுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலிலும் மதுரையிலுள்ள திருப்பரங்குன்றம் தொகுதியை திமுக கூட்டணியில் கேட்டு பெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களின் ஆதரவாளர்களுக்கு தீவிரமாக முயற்சித்த நிலையில், பிடிஆர் பழனிவேல் தியாராஜனின் ஆதரவாளரான இந்திராணி பொன்வசந்துக்கு வழங்கிய நிலையில் துணை மேயருக்கு நிறைய பேர் முயற்சித்தனர். இந்நிலையில் மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியது மதுரை திமுகவாசிகளுக்கு மட்டுமல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கே அதிர்ச்சியாக இருந்தது. 

சிறு சிறு மனகசப்புகள் இருந்தாலும் இந்தியா கூட்டணி என்ற ஒற்றை புள்ளியில் இருவரும் பயணித்து வந்தனர். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட செயலாளர்களான மணிமாறன், கோ.தளபதி தலைமையில் நடைபெற்ற அலுவல் கூட்டத்தில் தென்மாவட்டங்களில் திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தொகுதிகளை தொடர்ச்சியாக கூட்டணிக்கே ஒதுக்கப்படுகிறது. இம்முறை திமுக வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று தீர்மானங்களெல்லாம் நிறைவேற்றினர். ஆனாலும் மீண்டும் அத்தொகுதிகளெல்லாம் கூட்டணி கட்சியினருக்கே ஒதுக்கப்பட்டது. இதில் சிறிய மாற்றம் என்றால் கொங்கு மண்டலத்தில் 1996 ஆம் ஆண்டுக்கு பிறகு கோவையை திமுக கைப்பற்றியது. 

மதுரை துணை மேயர் கூட்டங்களுக்கு அழைக்கப்படுவதில்லை, கல்வெட்டில் பெயர் இடம்பெறவில்லை என போராட்டங்களிளெல்லாம் ஈடுபட்டார். இந்நிலையில் கடந்த வாரம் காஞ்சிபுரம் சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சிஐடியூ ஆளும் திமுக அரசுக்கு குடச்சலை கொடுத்தது. இணையத்தில் சிபிஎம் மற்றும் திமுகவினர் மாற்றி மாற்றி விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். 2026 தேர்தலுக்கு மும்மரமாக பணி செய்து கொண்டிருக்கும் திமுக, கூட்டணி கட்சியினரிடையே சாப்ட் கார்னாகவே செயல்பட்டு வருகிறது. கூட்டணியில் இருப்பதால் அனைத்திற்கு மவுனம் காக்க முடியாது என கூட்டணி கட்சிகளான சிபிஎம், விசிக, தவாக உள்ளிட்டோர் அவ்வப்போது கருத்தும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றைய முன் தினம் மதுரை முழுவதும் ‘மதுரை எம்.பி யை காணவில்லை’ என்ற வாசகங்களுடன் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. போஸ்டர் விவகாரம் குறித்து சிலரிடம் விசாரித்த போது இவ்விவகாரத்தில் திமுக பின் இருந்து செயல்படுகிறது எனவும் முனுமுனுத்தனர். மேலும் அது குறித்து x தளத்தில் விளக்கமிட்டு வீடியோ வெளியிட்ட சு.வெங்கடேசன் ‘வண்டியூர் ரேசன் கடைகளில் முறைகேடு குறித்து கண்டன பலகை வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் பொதுமக்கள் என்ற பெயரில் யார் போஸ்டர் ஒட்டியுள்ளனர் என சூசமாக தெரிவித்துள்ளார்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று மதுரை ஊமச்சிகுளத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் மதுரையில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயணிக்கும் வகையிலான புதிய 20 தாழ்தள பேருந்துகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதில் மேயர் இந்திராணி, சோழவந்தான் எம்.எல்.ஏ வெங்கடேசன், கூட்டணி கட்சியான மதிமுக எம்.எல்.ஏ பூமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில் எம்.பி மற்றும் துணை மேயர் கலந்து கொள்ளாதது மேலும் உரசலை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுக தலைமை இவ்விவகாரத்தை எப்படி முடிவுக்கு கொண்டு வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

- மா.நிருபன் சக்கரவர்த்தி