வக்பு வாரிய தலைவர் பதவியை அப்துல் ரகுமான் ராஜினாமா செய்தது ஏன்? அடுத்த தலைவர் யார்?

'வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா எந்த ஒரு மதத்தினரின் சுதந்திரத்திலும் தலையிடாது. இது யாருடைய உரிமைகளையும் பறிக்காது. எதிர்க்கட்சிகள் இஸ்லாமியர்களை தவறாக வழிநடத்துகிறது’என்று பாஜக விளக்கம் அளித்திருந்தது.

Sep 14, 2024 - 11:49
 0
வக்பு வாரிய தலைவர் பதவியை அப்துல் ரகுமான் ராஜினாமா செய்தது ஏன்? அடுத்த தலைவர் யார்?
Waqb Board Chairman Abdul Rahman

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமானின் ராஜினாமாவை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்ட நிலையில், அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த அப்துல் ரகுமான், தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக இருந்து வந்தார். இதற்கிடையே கடந்த மாதம் 19ம் தேதி, வக்பு வாரிய தலைவர் பதவியை  ராஜினாமா செய்த அப்துல் ரகுமான், இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். 

ஆனால் தமிழ்நாடு அரசு அப்துல் ரகுமானின் ராஜினாமாவை ஏற்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், அப்துல் ரகுமானின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக தமிழ்நாடு அரசு நேற்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் வக்பு வாரியத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அப்துல் ரகுமான் சுமார் 4 ஆண்டுகள் இந்த பதவியில் இருந்துள்ளார்.

மத்திய அரசு வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்ததன் காரணமாகவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்தவர்களுக்கே மீண்டும் வக்பு வாரியத்தின் தலைவர் பதவியை அளிக்க வேண்டும் என அந்த கட்சி சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய தலைவர் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் உலா வருகின்றன. 

அதே வேளையில் திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் பதவியை விரும்புவதாகவும் கூறப்படுகிறது. மத்திய அரசு கடந்த மாதம் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்தது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய அரசு கொண்டு வந்த மசோதா, இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் மத சுதந்திரத்தை மீறும் செயல் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதன்மூலம் வக்பு வாரியத்தின் சொத்துகளை மத்திய அரசு கையக்கப்படுத்த முயற்சிப்பதாகவும் கூறின. 

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பாஜக, 'வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா எந்த ஒரு மதத்தினரின் சுதந்திரத்திலும் தலையிடாது. இது யாருடைய உரிமைகளையும் பறிக்காது. எதிர்க்கட்சிகள் இஸ்லாமியர்களை தவறாக வழிநடத்துகிறது’என்று கூறியது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow