த.வெ.க-வில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்? - நடந்தது என்ன? உண்மையை விளக்கிய சி.டி.ஆர்.நிர்மல்குமார்
விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனாவை நீக்கிய பழைய ஸ்கீரின் ஷார்ட்டுகளை எடிட் செய்து இதுபோன்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆதவ் அர்ஜுனா தவெகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு தவெக துணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் மார்டினின் மருமகனும், வாய்ஸ் ஆப் காமர்ஸ் என்னும் அரசியல் வியூக நிறுவனத்தை நடத்தி வருபவருமான ஆதவ் அர்ஜுனா தவெகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் முதலில் விசிகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். பின்னர் விசிகவிற்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுப்பது, பிரமாண்ட மாநாடு நடத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் இவரின் தலைமையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விசிகவில் ஆதவ் அர்ஜுனாவிற்கு துணைப்பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் ஆதவ் அர்ஜுனாவின் அதிரடி கருத்தால் விசிக - திமுக கூட்டணிக்கட்சிக்குள் சலசலப்பு எழுந்தது.
இதன்காரணமாக ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.இதையடுத்து சில வாரங்களில் தான் விசிகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ஆதவ் அர்ஜுனா. தவெகவில் விஜய் முன்னிலையில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு தவெகவின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து சென்னை மாமல்லபுரத்தை அடுத்த பூச்சேரியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை தவெக தலைவர் விஜய் ரசித்து பார்த்தார். இதைத்தொடர்ந்து, அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் டெல்லிக்கு பயணம் செய்தார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள், தேர்தல் வியூகங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் தவெக சார்பில் நடந்த இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
Fake and Wrong Information... pic.twitter.com/UubAnZN5Vu — CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) March 17, 2025
இந்த நிலையில், தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வைரலாகி வருகிறது.தவெகவில் இணைந்து செயல்பட்டு வந்த ஆதவ் அர்ஜுனா ஏன் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில், தவெக துணைப்பொதுச்செயலாளர்( சமூக ஊடகப் பிரிவு) சி.டி.ஆர். நிர்மல்குமார் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வைரல் ஸ்கீரின் ஷார்ட்களை பகிர்ந்து, “இது போலியானது, தவறான தகவல்” என பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம் ஆதவ் அர்ஜுனா தவெகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனாவை நீக்கிய பழைய ஸ்கீரின் ஷார்ட்டுகளை எடிட் செய்து இதுபோன்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?






