வரலாறு காணாத ஊழல்...திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறிவார்கள் - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

அறவழிப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக சரித்திரம் இல்லை. வரலாறு காணாத ஊழல் செய்து பணம் குவித்து, அதன் மூலம் அரசியல் செய்யும் வித்தகர்களான திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

Mar 17, 2025 - 14:48
Mar 17, 2025 - 15:11
 0
வரலாறு காணாத ஊழல்...திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறிவார்கள் - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
வரலாறு காணாத ஊழல்...திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறிவார்கள் - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கையில்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையை ஏவி பாஜக போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று கனவு காண்கிறார் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில்,  “தமிழகத்தில், திமுக ஆட்சியில் டாஸ்மாக் துறையில் நடைபெற்றுள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  அமலாக்கத்துறையின் அறிக்கையால் ஆடிப்போயுள்ள திமுக அரசு, இது தொடர்பான தகவல்கள் மக்களைச் சென்றடையாமல் தடுப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது.

 இந்த ஊழலை தமிழக மக்களிடத்தில் எடுத்துச் சென்று, உண்மையை அம்பலப்படுத்தி வருகிறது தமிழக பார‌திய  ஜனதா கட்சி.இதனால் ஆத்திரமடைந்துள்ள திமுக அரசு, தமிழகம் முழுவதும் பாஜகவினர் மீது வன்முறையை ஏவி வருகிறது. டாஸ்மாக் துறையில் நடைபெற்றுள்ள 1000 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திட முயன்ற பாஜக தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். 

பாஜக தொண்டர்கள் மீது காவல் துறையினர் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மூத்த தலைவர் எச்.ராஜா , தமிழக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார்நாகேந்திரன் , கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.ஆர்.சரஸ்வதி, மாநில துணைத் தலைவர் கருநாகராஜன், மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட, தமிழக பாஜக-வின் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.  

ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கையில்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையை ஏவி பாஜக போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று கனவு காண்கிறார். அறவழிப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக சரித்திரம் இல்லை. வரலாறு காணாத ஊழல் செய்து பணம் குவித்து, அதன் மூலம் அரசியல் செய்யும் வித்தகர்களான திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

தமிழக பாஜக மாநிலத் தலைவர் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் மீதும், முக்கிய நிர்வாகிகள் மீதும் தொடுக்கப்பட்டிருக்கும் இந்த அதிகார துஷ்பிரயோகச் செயலை, உடனடியாக தமிழக காவல்துறை கைவிட வேண்டும் என்பதை கடுமையாக வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow