மகா கும்பமேளா 2025.. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய நடிகை கத்ரீனா
உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கத்ரீனா கைஃப், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்த மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா வரும் 26-ஆம் தேதி வரை சுமார் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்காக பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் ஒன்றுகூடும் இடத்தில் இந்த மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. மூன்று நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் நீராடுவது புண்ணியம் என்பதால் உலகின் பல இடங்களில் இருந்து பக்தர்கள் மகா கும்பமேளாவிற்கு வருகை தருகின்றனர். நாளுக்கு நாள் திரிவேணி சங்கமத்தில் அதிகப்படியான பக்தர்கள் நீராடி வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 40 கோடிக்கு மேல் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனர்.
சமீபத்தில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உட்பட பலர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். அந்த வரிசையில் இன்று (பிப். 24) நடிகை கத்ரீனா கைஃப் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். இவருடன் அவரது கணவர் விக்கி கௌஷலின் அம்மா வீணா கௌஷலும் புனித நீராடினார்.
முன்னதாக நடிகை கத்ரீனா கைஃப், பிரயாக்ராஜில் உள்ள பரமார்த் நிகேதன் ஆசிரமத் தலைவர் சுவாமி சிதானந்த சரஸ்வதியை சந்தித்து ஆசி பெற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக பெளஷ பெளர்ணமி (ஜன. 13), மகா சங்கராந்தி (ஜன. 14), மெளனி அமாவாசை (ஜன. 29), வசந்த பஞ்சமி (பிப். 3), மாகி பெளர்ணமி (பிப். 12), மகா சிவராத்திரி (பிப். 26) ஆகிய ஆறு நாட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் பல்வேறு இடங்களில் இருந்து துறவிகள், பக்தர்கள் ஊர்வலமாக வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






