சினிமா

மூன்று நாட்களில் வசூல் சாதனை படைத்த ‘டிராகன்’.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படம் மூன்று நாட்களில் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

மூன்று நாட்களில் வசூல் சாதனை படைத்த ‘டிராகன்’.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த ‘டிராகன்’ திரைப்படம்

இயக்குநர், நடிகர் என்ற பன்முகத் தன்மை கொண்ட பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிராகன்’. ’ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கௌதம் மேனன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.  சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னதாக ‘லவ் டுடே’ படத்தில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்ட நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் டீசர், டிரைலர் போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, பிப்ரவரி 21-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான ‘டிராகன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல், இப்படத்தின் வசூல் பெரிய நடிகர்களின் படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளும் அளவிற்கு அமைந்துள்ளது. அதாவது, ‘டிராகன்’ திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ‘டிராகன்’ திரைப்படம் மூன்று நாட்களில் உலக அளவில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் 24.9 கோடியும், ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் 6.25 கோடியும், கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் 4.37 கோடியும், வெளிநாடுகளில் 14.7 கோடியும் வசூல் செய்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க: நிறைய ஹீரோயின்ஸ் என் கூட நடிக்க தயங்குனாங்க.. நடிகர் பிரதீப் ரங்கநாதன் உருக்கம்

இளைஞர்களின் மனதை கவர்ந்த பிரதீப் ரங்கநாதனின் நடிப்பும், சுவாரஸ்யமான திரைக்கதையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ள நிலையில்  இப்படம், வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெளியான குறுகிய நாட்களிலேயே இவ்வளவு பெரிய வசூல் சாதனை படைக்கும் என யாருமே கணிக்கவில்லை என்று கூறப்படுகிறது.