Telegram in India : டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் தடை?... காரணம் குறித்து வெளியான தகவல்..

Telegram May Ban in India : டெலிகிராம் செயலி மூலம் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இந்தியாவில் தடைவிதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Aug 27, 2024 - 11:03
Aug 27, 2024 - 12:28
 0
Telegram in India : டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் தடை?... காரணம் குறித்து வெளியான தகவல்..
இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தடைவிதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன

Telegram May Ban in India : சமூக வலைதளமான டெலிகிராம் செய்தி பரிமாற்ற செயலியாக இருந்தாலும், திரைப்படங்கள் பதிவிறக்கம், விளையாட்டு, இலவசமான கோர்ஸ், என பல விஷயங்கள் உள்ளது. பேஸ்புக், யூடியூப், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், டிக்டாக் என பல செயலிகள் இருந்தாலும், நெட்டிசன்கள் மத்திய முக்கிய இடத்தை பெற்றுள்ளது டெலிகிராம். 

ரஷ்யாவில் பிறந்த நாவல் துரோவ் 2013ஆம் ஆண்டில் தனது சகோதரர் நிக்கோலாயுடன் சேர்ந்து டெலிகிராம் செயலியை உருவாக்கினார். டெலிகிராம் செயலி துபாயை தளமாக கொண்டது. இத்தனை ஆண்டு காலமாக உழைத்து உலகம் முழுவதிலும், 900 மில்லியன் பயனர்களை சென்று சேர்ந்துள்ளது. டெலிகிராம் செயலி, ரஷ்யா, உக்ரைன் மற்றும் பல இடங்களில் அதிக பயனர்களை கொண்டுள்ளது.

2014ம் ஆண்டில் தனது விகே செயலிக்கு எதிராக ரஷ்ய அரசு வைத்த நிபந்தனைகளை பின்பற்ற விருப்பம் இல்லாததால், அந்த நாட்டை விட்டே வெளியேறினார் துரோவ். பிறகு, அந்த செயலியை வேறொருவரிடம் விற்றார். இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி, டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், கைது செய்யப்பட்டார்.

டெலிகிராம் செயலி மூலம் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தவிர, போதைப் பொருள் கடத்தல், குழந்தைகளை மையப்படுத்திய பாலியல் சார்ந்த தகவல்கள், மோசடி ஆகிய விவகாரங்களில் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஒத்துழைக்க தவறியதாகவும் டெலிகிராம் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

மேலும், குற்றவியல் நடவடிக்கைகளை கண்காணிக்க தவறியது, பயனாளர்களின் தரவுகளை அரசிடமிருந்து மறைத்து பாதுகாத்தது போன்ற குற்றச்சாட்டுகளை அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் தடை:

இந்நிலையில், டெலிகிராம் தளத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலே குறிப்பிடப்பட்ட விவகாரங்கள் குறித்து, இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சூதாட்டம் போன்ற சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்கப்படவில்லை என்றாலும், இறுதி முடிவு விசாரணையின் முடிவைப் பொறுத்தது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 11 அன்று நடைபெற்ற முதுகலை நீட் நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் விற்பனைக்கு உள்ளதாக டெலிகிராமில் தகவல் பரவியது. PG NEET leaked materials எனும் பெயரில் தொடங்கப்பட்டுள்ள டெலிகிராம் கணக்கில் இந்த தகவல் வெளியானது. மேலும், நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் 70 ஆயிரம் ரூபாய்க்கு கிடைப்பதாக தகவல்கள் பரவியது. இந்த தகவல் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த 2023 அக்டோபர் மாதம், டெலிகிராம் மற்றும் சில சமூக ஊடக நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. அவர்களின் தளங்களில் இருந்து குழந்தை பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை அகற்றுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow