நடிகை கஸ்தூரி அதிரடி கைது... ஐதராபாத்தில் தட்டித் தூக்கிய போலீஸ்!
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து தனிப்படை போலீசார் இன்று (நவ. 16) கைது செய்துள்ளனர்.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில இந்திய தெலுங்கு சம்மேளணம் அமைப்பினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் எழும்பூர் போலீசார் நடிகை கஸ்தூரி மீது இரு பிரிவினரிடையே கலகத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து நடிகை கஸ்தூரிக்கு சம்மன் அளிக்க அவரது வீட்டிற்கு சென்றபோது அவர் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவானதால் இரண்டு தனிப் படைகள் அமைத்து நடிகை கஸ்தூரியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகை கஸ்தூரி முன்ஜாமின் மனு தாக்கல் செய்த நிலையில், அதனை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் நடிகை கஸ்தூரியை பிடிக்க தனிப்படைகள் ஹைதராபாத் மற்றும் ஆந்திராவில் முகாமிட்டு தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று ஹைதராபாத் புப்பல்குடா என்ற இடத்தில் பதுங்கி இருந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கஸ்தூரி தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருக்கும் போது கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து நடிகை கஸ்தூரியை சாலை மார்க்கமாக சென்னைக்கு அழைத்து வரும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். நாளை காலை எழும்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதற்கான காரணம் என்ன? பின்புலமாக யார் செயல்பட்டனர்? என்ற கோணத்தில் நடிகை கஸ்தூரியிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
What's Your Reaction?