ஆடி வெள்ளி விரதம்.. குலம் தலைக்கும் குல தெய்வ வழிபாடு.. பிரதோஷமும் கூட வருது!

Aadi Velli Viratham Benefits in Tamil : ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு அம்மன் கோவில்களில் பாலபிஷேகம் செய்து வழிபட்டால் சுக்கிரன் அருள் கிடைக்கும் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. குல தெய்வ வழிபாடு செய்வதும் அவசியமாகும்

Jul 18, 2024 - 18:40
Jul 19, 2024 - 10:03
 0
ஆடி வெள்ளி விரதம்.. குலம் தலைக்கும் குல தெய்வ வழிபாடு.. பிரதோஷமும் கூட வருது!
Aadi Velli Viratham Benefits in Tamil

Aadi Velli Viratham Benefits in Tamil : ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எல்லா வெள்ளிக்கிழமையும் எல்லா தெய்வங்களுக்கும் உகந்தது தான் என்றாலும் ஆடி வெள்ளி குலதெய்வத்திற்கு(Kula Deivam Viratham) மிகவும் ஏற்றது. இந்த ஆண்டு ஆடி முதல் வெள்ளிக்கிழமை நாளை (ஜூலை 19 )வருகிறது. 

ஆடி மாதத்தில்(Aadi Month) வரும் ஒவ்வொரு வெள்ளியன்றும் புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று பாம்பு புற்றுக்கு பால் வார்த்துக் குலம் தழைக்க வேண்டுதல் செய்துகொள்ளலாம். முதல் வெள்ளியன்று இனிப்புத் தேங்காய் கொழுக்கட்டை, உப்பு, காரப் பருப்புக் கொழுக்கட்டை, எள்ளுக் கொழுக்கட்டை ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.

இந்த ஆண்டு ஆடி முதல் வெள்ளி, சிவ பெருமானுக்குரிய பிரதோஷ நாளில் இணைந்து வருவது மிகவும் சிறப்பானதாகும். அம்பாளின் அருளையும், சிவனின் அருளையும் பெறுவதற்குரிய நாளாக இந்த நாள் அமைகிறது. அதனால் பிரதோஷ வழிபாட்டையும், அம்பாள் வழிபாட்டினையும் சேர்த்தே மேற்கொள்ளலாம்.

ஆடி வெள்ளி விரதம்(Aadi Velli Fasting) இருப்பது மிகவும் சுலபமானதாகும். அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வீட்டில் விளக்கேற்றுங்கள். கோவிலுக்கு சென்று விளக்கேற்றுவது சிறப்பு. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் உள்ள மகாலட்சுமியின் படத்திற்கு முன் அல்லது அம்பிகையின் படத்திற்கு முன் நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம்.

ஆடி வெள்ளிக்கிழமை நாளில் குல தெய்வத்திற்கு சர்க்கரை பொங்கலை படைப்பது மிக மிக விசேஷமானது. சர்க்கரை பொங்கல், வெற்றிலைப் பாக்கு ஆகிய இரண்டு மட்டுமே கூட போதுமானது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்துக்கு முன்பே பூஜையை முடிப்பது சிறந்தது. குலதெய்வத்துக்கான சுலோகம் தெரியாதவர்கள் பொதுவான அம்மன் பாடல்களை ஒலிக்கச் செய்யலாம். கற்பூரம், ஊதுபத்தி காண்பித்து சாம்பிராணி போட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஒரு ரூபாயை மஞ்சள் துண்டில் காணிக்கையாக முடிந்து வைத்து வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் வேண்டுதல் நிறைவேறியதும், குல தெய்வ கோவிலுக்கு போகும் போது அதை மறக்காமல் கொண்டு போய் உண்டியலில் செலுத்த வேண்டும். ஆடி வெள்ளிக்கிழமை குல தெய்வத்தை மறக்காமல் வழிபட்டால் அனைத்து வளங்களும் சேரும். தொழில் மேன்மை அடையும் திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow