தவெகவின் அரசியல் ஆலோசகராகும் ஆதவ் அர்ஜுனா?
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், பரந்தூர் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்ததையடுத்து மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் நேர்காணல் நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட செயலாளர்களை விஜய் நேர்காணல் செய்தார்.
இன்று (ஜன 29) இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், விஜய் கலந்து கொண்ட நிலையில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். 19 மாவட்ட பொறுப்பாளர்கள் குறித்த பட்டியலை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் 19 பேருக்கும் நியமன ஆணையுடன் வெள்ளி நாணயமும் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க: புகார் வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்க தலைமை தயங்காது- விஜய் அதிரடி
மாவட்ட செயலாளர்கள் மத்தியில் பேசிய விஜய், கட்சி தலைமைக்கு மாவட்ட செயலாளர்கள் குறித்து புகார்கள் வரும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை தயங்காது என எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கட்சிக்காக உழைக்கும் அனைவருக்கும் உரிய நிர்வாக வாய்ப்பையும், பிரதிநிதித்துவத்தையும் வழங்க வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜுனா இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்ததாக கூறப்படுகிறது. 'வாய்ஸ் ஆப் காமன்' என்ற நிறுவனத்தை நடத்திவரும் ஆதவ் அர்ஜுனா, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்து 2026-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் அரசியல் ஆலோசகராக செயல்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?