மகா கும்பமேளா 2025: கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி.. 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாகவும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
உலகின் மிக பெரிய ஆன்மிக நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும். இந்த கும்பமேளா ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 26-ஆம் தேதி வரை சுமார் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்காக பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆயிரத்து 800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், இரண்டாயிரத்து 750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.
மேலும் படிக்க: மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்.. 17 பேர் உயிரிழப்பு..!
கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் ஒன்றுகூடும் இடத்தில் இந்த மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. மூன்று நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் நீராடுவது புண்ணியம் என்பதால் உலகின் பல இடங்களில் இருந்து பக்தர்கள் மகா கும்பமேளாவிற்கு வருகை தருகின்றனர். நாளுக்கு நாள் திரிவேணி சங்கமத்தில் அதிகப்படியான பக்தர்கள் நீராடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தை அமாவாசை என்பதால் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. புண்ணிய நதியில் நீராடுவதற்காக அதிகாலையில் பக்தர்கள் தடுப்புகளை உடைத்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் படிக்க: அயோத்திக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம்.. அறக்கட்டளை அதிரடி அறிவிப்பு
மேலும், கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில், 25 பேரின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து மீண்டும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கூட்ட நெரிசல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?