பொதுமக்களிடம் பணம் பறிக்கும் கும்பல்கள் வழிப்பறி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சம்பங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நவீன கணினி யுகத்தில் ஆன்லைன் கேமிங், வங்கிக் கணக்கை முடக்கம், ஆன்லைன் சூதாட்டம் மூலம் மற்றொரு கும்பல் பணத்தை சுருட்டி வருகின்றனர். இந்நிலையில், காதலர்களை மிரட்டி பணம் பறித்த கும்பல் போலீஸாரிடம் சிக்கியுள்ளது.
தஞ்சாவூரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 24) தனது காதலியுடன் திருமானூருக்கு செல்வதற்காக, மோட்டார் சைக்கிளில் தஞ்சை -திருவையாறு புறவழி சாலையில் சென்றுள்ளார். அப்போது, தமிழரசனின் காதலிக்கு திடீரென உடல் உபாதை ஏற்பட்டதை அடுத்து, மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார்.
அப்போது அங்கு சென்ற 5 பேர் கொண்ட கும்பல் திடீரென தமிழரசன், அவரது காதலியை மிரட்டி பணம் கேட்டனர். மேலும், பணம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்தனர். அதற்கு தமிழரசன் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் வீட்டில் யாரிடமாவது இருந்து கூகுள்-பே மூலம் பணம் அனுப்புமாறு மிரட்டினர். இதனால் உயிருக்கு பயந்து தமிழரசனின் காதலி, அவரது வீட்டில் சகோதரி மூலம் கூகுள்-பே மூலம் ரூ.3000 அனுப்புமாறு கூறியுள்ளார். அந்த பணம் தமிழரசனின் கூகுள்-பே எண்ணிற்கு வந்ததும், பணத்தை அந்த நபர்களின் வங்கிற்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் அந்த 5 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தமிழரசன் கள்ளப் பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் காதலர்களை மிரட்டி பணம் பறித்தது தஞ்சை மேலத்தெருவை சேர்ந்த பாபு (24), மணிகண்டன் (27), கீழத்தெரு வல்லரசன் (21), மாதாகோவில் தெரு சார்லஸ் (29), ரெட்டிபாளையம் மெயின் சாலையை சேர்ந்த விக்கி ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதில் பாபு, மணிகண்டன், வல்லரசன், சார்லஸ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விக்கியை தேடி வருகின்றனர்.