முறையான சிகிச்சை இல்லை.. மருத்துவருக்கு கத்திக்குத்து.. மருத்துவமனையில் கொடூரம்
சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை உலகத்தரம் வாய்ந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு உள்நோயாளிகள், புறநோயாளிகள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் இன்று (நவ. 13) நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து கொண்டிருந்தபோது, விக்னேஷ் என்ற இளைஞர் அவரை கத்தியால் குத்தினார். இதையடுத்து உடனடியாக மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய விக்னேஷை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், விக்னேஷின் தாயார் பிரேமா, கடந்த ஒரு மாத காலமாக புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவர் பாலாஜி அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி கத்தியால் குத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
பிரேமாவுக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால் விக்னேஷ் கடந்த சில நாட்களாகவே மனஉளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இன்று காலை விக்னேஷ் புறநோயாளி போல பதிவு செய்து கொண்டு, புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை நேரில் சந்தித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் மருத்துவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் அவரின் உறவினர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும், “விக்னேஷ் தாயார் புற்றுநோய் முற்றிய நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து திடீரென்று டிஸ்ஜார்ஜ் செய்து அவரது உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த விவகாரத்தில் 4 பேர் சேர்ந்து சம்பவத்தை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்த நிலையில், தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதி, “கழுத்து, காதுக்கு பின்புறம், நெற்றி உள்ளிட்ட 7 இடங்களில் மருத்துவருக்கு கத்தியால் குத்தப்பட்ட நிலையில், உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மயக்க நிலையில் இருக்கும் மருத்துவர் நலமாக உள்ளார். 8 மணி நேரத்திற்கு பிறகு அவரது நிலை குறித்து தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






